டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் தூங்கி விட்டேன்: ஜோ பைடன் ஒப்புதல்

வாஷிங்டன்: டிரம்புடன் நடந்த விவாதத்தின் போது தூங்கி விட்டதாக அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன்(81), குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் (78) போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபடுவது அந்நாட்டில் வழக்கம். அதன்படி,கடந்த வாரம் அட்லாண்டாவில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் இருவரும் விவாதத்தில் ஈடுபட்டனர். பார்வையாளர்கள் இன்றி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. நேருக்கு நேர் விவாதத்தில் ஜோ பைடன் மீது டிரம்ப் பல குற்றச்சாட்டுகளை கூறினார்.

விவாதத்தின் போது பைடன் தடுமாறினார். விவாதத்தில் பைடனை விட டிரம்ப் பேச்சு சிறப்பாக இருந்ததாக தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பில் அதிகமான பார்வையாளர்கள் தெரிவித்திருந்தனர். வயது காரணமாகவும், உடல் நிலை காரணமாகவும் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது.இந்த விமர்சனங்களால்,அதிபர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதாக தகவல்கள் வந்தன.

இந்நிலையில்,விர்ஜினியாவில் கட்சி நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பைடன்,‘‘நான் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுபயணம் செய்கிறேன். விவாத நிகழ்ச்சியின் போது சிறிது நேரம் தூங்கி விட்டேன்.அதனால் என்னுடைய கவனத்தை முழுமையாக செலுத்த இயலவில்லை. என்னுடைய உரை சிறப்பாக இல்லை என்பது தெரியும். ஆனால், அடுத்து 4 ஆண்டுகளுக்கு நாட்டை வழி நடத்தி செல்வதற்கான திறன் எனக்கு உள்ளது’’ என்றார்.

கமலா ஹாரீஸ்க்கு வாய்ப்பு?
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கருத்து கருத்து கணிப்பின்படி தற்போது துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ்சுக்கு அதிபர் வேட்பாளராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கருத்துக்கணிப்பின்படி, டிரம்பா- பைடனா என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் டிரம்புக்கும் 43 சதவீதம் பேர் பைடனுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். டிரம்பா- கமலா ஹாரிஸா என்ற கேள்விக்கு 47 சதவீத பேர் டிரம்புக்கு ஆதரவாகவும், 45 சதவீதம் பேர் கமலா ஹாரிஸ் அதிபர் ஆகலாம் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அதிபர் ஒபாமா மனைவி மிட்ச்செல் ஒபாமாவை தேர்தலில் போட்டியிட வைக்க கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். மிட்ச்செல்லுக்கு இதில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.எனவே, கமலா ஹாரிஸ்க்கு பெண் வாக்காளர்களின் ஆதரவு கணிசமாக உள்ளதால் அதிபர் வேட்பாளராக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

The post டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் தூங்கி விட்டேன்: ஜோ பைடன் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: