மயிலாடும்பாறை அருகே கிணற்று நீரை குடிநீராக பயன்படுத்தும் மக்கள்

வருசநாடு: தேனி மாவட்டம், மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மந்திசுனை-மூலக்கடை ஊராட்சியில் சிறப்பாறை கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு மயிலாடும்பாறை மூல வைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. அதற்காக சிறப்பாறை கிராமத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் உயரமான பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ளதால் அதில் நீரை தேக்க முடியவில்லை. அவ்வாறு நீரை நிரப்பினாலும் அது மக்களுக்குப் போதுமானதாக இல்லை. இது தொடர்பாக கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கூட்டுக்குடிநீர் குழாயில் வரும் நீரை மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏற்றுவதற்கு பதிலாக கிராம பொது கிணற்றில் தேக்கி வைத்து அதிலிருந்து கயிறு மூலம் இறைத்து பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து கிராம பொதுமக்கள் கூறுகையில்,  ‘‘முதியவர்கள் கிணற்றிலிருந்து நீரை இறைக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும் கிணறு திறந்தவெளியில் உள்ளதால் நீர் மாசடைந்து வருகிறது அதனால் பொதுமக்களுக்கு அடிக்கடி காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகிறது. சிறப்பாரை கிராமத்திற்கு முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர். இது குறித்து பார்வர்ட் பிளாக் ஒன்றிய நிர்வாகி பிரபாகரன் கூறுகையில், ‘‘கடந்த சில மாதங்களாகவே கிணற்றிலிருந்து நீரை இறைத்து குடிக்கும் அவல நிலை உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்….

The post மயிலாடும்பாறை அருகே கிணற்று நீரை குடிநீராக பயன்படுத்தும் மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: