செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில், தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறையில் அறிவித்துள்ள கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2024-2025ம் ஆண்டிற்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊரக பகுதிகளில் பழுதடைந்த 2001ம் ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்ட சாய்தள வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகள் பழுதுநீக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை குடிசைகள் அற்ற மாநிலமாக மாற்றவும் பழுதடைந்துள்ள வீடுகளில் வசிக்கும் மக்களின் நலன்களை பாதுகாத்திட அந்த வீடுகளை பழுதுகள் நீக்கி புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த போதிய ஊழியர்கள் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிரமங்கள் உள்ளன. எனவே, இந்த இரண்டு திட்டங்களையும் தமிழ்நாட்டின் அனைத்து கிராமப்புறங்களிலும் சிறப்பாக செயல்படுத்திட தமிழக அரசே, ஊழியர்கள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

அதேபோல, கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளர்கள் தேர்வு குறித்தான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உடனே வெளியிட வேண்டும். தமிழக அரசே, திட்ட பயனாளர்கள் பட்டியலை இறுதிபடுத்த உரிய கால அவகாசம் வழங்கிட வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: