அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேர இன்று முதல் விவரங்களை பதிவு செய்யலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் சென்னையிலுள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில், மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர் கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன. குடிமைப்பணி முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்களுக்கு ஜூலை முதல் செப்டம்பர்-2024 வரை மூன்று மாதங்களுக்கு முதன்மைத் தேர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ஆர்வலர்கள் மட்டுமன்றி, குடிமைப்பணி முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த இதர ஆர்வலர்களும் இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி பெறக்கூடிய மூன்று மாத காலத்திற்கும் ஊக்கத் தொகையாக ரூ.25,000 “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் வழங்கப்படும். அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் சேர விரும்பும் ஆர்வலர்கள் இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளவும்.

இட ஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட ஆர்வலர்கள் விவரம் நாளை வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் இணையத்தில் வெளியிடப்பட்டு, 5,6ம் தேதிஆகிய இரு நாட்களில் சேர்க்கை நடைபெறுவதோடு 8ம் தேதி முதல் முதன்மைத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். அரசு விதிகளுக்குட்பட்டுப் பதிவு செய்தவர்களில், 225 ஆர்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044-24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 9345766957 வாட்ஸ்-அப் மூலமாகவும், www.civilservicecoaching.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

The post அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேர இன்று முதல் விவரங்களை பதிவு செய்யலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: