கடன் தொல்லையால் தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: மனைவி சாவு மகன் உயிர் ஊசல்

குலசேகரம்: கடன் தொல்லையால் தொழிலதிபர் குடும்பத்துடன் விஷம் குடித்தார். இதில் மனைவி பலியானார். குமரி மாவட்டம் குலசேகரம் மாமூடு பகுதியில் உள்ள பொன்னுமங்களத்து வீட்டை சேர்ந்தவர் அஜித்குமார் (65). இவரது மனைவி சைலஜா (57). இவர்களுக்கு சந்துரு (38), சுப் பிரதீப் (27) என்ற 2 மகன்கள். சந்துரு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். அங்கு ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியில் உள்ளார். 2வது மகன் சுப் பிரதீப், திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகிறார்.

அஜித்குமாருக்கு குலசேகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ரப்பர், தென்னந்தோட்டங்கள் அதிகம் உண்டு. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை தியேட்டர் உள்ளிட்ட சில நிறுவனங்களையும் நடத்தி வந்தனர். இந்நிலையில் கோடிக்கணக்கில் கடன் ஏற்பட்டதால் சொத்தின் ஒரு பகுதியை விற்று பிரச்னைக்கு தீர்வு காண முயன்றார். ஆனாலும் முழுமையாக கடனை அடைக்க முடியவில்லை.

பரம்பரையாக இருந்த சொத்துக்கள் கைவிட்டு போவதை எண்ணி அஜித்குமார் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார். இதற்கிடையே நேற்று (செவ்வாய்) காலை அஜித்குமார் கோவையில் உள்ள மகன் சந்துருவிடம் செல்போனில், ‘எங்களுக்கு வாழ பிடிக்கவில்லை. விஷம் சாப்பிட்டுவிட்டோம், நாங்கள் இந்த உலகத்தை விட்டு செல்கிறோம். நீ உன் குடும்பத்தை பார்த்துக் கொள்’ என்று கூறியுள்ளார். உடனடியாக சந்துரு அதே பகுதியில் உள்ள மாமனாரை தொடர்பு கொண்டு கூறினார்.

இதையடுத்து அவர் நேற்று காலை அஜித்குமார் வீட்டுக்கு வந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது அஜித்குமார், சைலஜா மற்றும் 2வது மகன் சுப் பிரதீப் (27) ஆகியோர் மயங்கிய நிலையில் கிடந்தனர். தகவலையடுத்து குலசேகரம் போலீசார் தீயணைப்பு துறையினர் வந்து, கதவை உடைத்து மூவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் சைலஜா ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. அஜித்குமார் மற்றும் சுப் பிரதீப் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post கடன் தொல்லையால் தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: மனைவி சாவு மகன் உயிர் ஊசல் appeared first on Dinakaran.

Related Stories: