செங்கோல் விவகாரம் : ஒன்றிய அரசு நாடகம்: எடப்பாடி பேட்டி

இடைப்பாடி: நாடாளுமன்றத்தில் செங்கோலை வைக்க வேண்டும் என்றும், வைக்க வேண்டாம் என்றும் பலர் கூறுகிறார்கள். இது ஒன்றிய அரசு சம்பந்தப்பட்டது. இது எல்லாம் ஒன்றியத்தில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் நடத்துகின்ற நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் இடைப்பாடி பயணியர் மாளிகையில் நேற்று கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுக ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் விவகாரத்தில் நேர்மையாக விசாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல் கள்ளக்குறிச்சி விவகாரத்திலும் அரசு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கள்ளசாராயம் குறைந்த விலையில் கிடைக்கிறது என்று நினைத்துதான் அதிகளவில் நாடுகிறார்கள். அதை அழித்துவிட்டால் இதுபோன்ற மரணங்கள் நிகழாது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழ்மையான குடும்பத்தில் இருப்பவர்கள். அரசு வழங்கும் நிதி அவர்களுக்கு பயன்படும்.

அதிமுக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட போது சீமான் ஆதரவு தெரிவித்தார். எங்களைப் போன்று நல்ல காரியங்களுக்காக நாம் தமிழர் கட்சி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டால் அதற்கு அதிமுக கண்டிப்பாக ஆதரவு தெரிவிக்கும். ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களின் கருத்துக்களை கேட்டும், மக்களின் கருத்துக்களை கேட்டும் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாடாளுமன்றத்தில் செங்கோலை வைக்க வேண்டும் என்றும், வைக்க வேண்டாம் என்றும் பலர் கூறுகிறார்கள்.

இது ஒன்றிய அரசு சம்பந்தப்பட்டது. இது எல்லாம் ஒன்றியத்தில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் நடத்துகின்ற நாடகம். மத்தியில் தேசிய கட்சிகள் தொடர்ந்து நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை நாட்டு மக்களின் பிரச்னை தான் முக்கியம்.  இதை கருத்தில் கொண்டே சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அதிமுக செயல்பட்டு வருகிறது. தேர்ந்தெடுத்த மக்களுக்கு விசுவாசமாக இருந்து பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே எங்களது லட்சியம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

The post செங்கோல் விவகாரம் : ஒன்றிய அரசு நாடகம்: எடப்பாடி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: