விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; தபால் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி தீவிரம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில், விருப்பம் தெரிவித்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிப்பதற்கான தபால் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் பழனி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. அதன்படி தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டிலிருந்தபடியே தங்களுடைய வாக்கை செலுத்திடும் வகையில் 85 வயதுக்கு மேற்பட்ட 2,304 மூத்த குடிமக்கள், 3,473 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 5,777 வாக்காளர்களிடம் 12டி படிவம் வழங்கப்பட்டு விருப்பம் கோரப்பட்டது.

இதில் 85 வயதுக்கு மேற்பட்ட 290 மூத்த குடிமக்கள் மற்றும் 277 மற்றுத்திறனாளிகள் என மொத்தம் 567 வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிப்பதற்கு விருப்பம் தெரிவித்தனர். அதனடிப்படையில் தற்போது விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் விருப்பம் தெரிவித்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிப்பதற்கான தபால் வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டு வருகிறது என்றார். தபால் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி ஓரிரு நாட்களில் முடிக்கப்பட்டு சரிபார்க்கப்படுகிறது. இதன் பின்னர் வரும் வாரம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்று தபால் வாக்குகளை பெற உள்ளனர். இவைகள் அனைத்தும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; தபால் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: