தமிழ்நாடு யாதவ மகாசபை செயற்குழுவில் யாதவ மாணவர்களுக்கு யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி அளிக்க ரூ.10 லட்சம் நிதியுதவி: மாநில தலைவர் நாசே ராமச்சந்திரன் வழங்கினார்

சென்னை: சென்னையில் தமிழ்நாடு யாதவ மகாசபையின் செயற்குழு கூட்டம் நேற்று மாநிலத் தலைவர் டாக்டர் நாசே ஜெ.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், யாதவ மாணவர்களின் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி ஆகியவற்றின் தகுதி தேர்வுக்கு பயிற்சி அளிக்க சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமியுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட யாதவ குடும்பத்தை சேர்ந்த 10 மாணவ-மாணவிகள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தகுதி தேர்வு பயிற்சி பெறுவதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை தமிழ்நாடு யாதவ மகாசபையின் மாநில தலைவர் நாசே ராமச்சந்திரன் வழங்கினார். இக்கூட்டத்தில், யாதவ சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள்ஒதுக்கீடு மூலம் சமூகநீதியை நிலைநாட்ட, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.

இக்கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய-மாநில அரசை வலியுறுத்தி, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு யாதவ மகாசபை சார்பில் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஆடு, மாடு வளர்ப்புக்கான மேய்ச்சல் நிலத்தை யாதவர்களுக்கு தமிழக அரசு ஒதுக்கி தரவேண்டும். மேலும், தமிழ்நாடு ஆடு,மாடு வளர்ப்போர் வாரியத்தை தமிழக அரசு நிறுவி, அதற்கு ஒரு யாதவரை தலைவராக நியமிக்க வேண்டும். மேலும், திருச்சி அருகே யாதவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவங்கி, அடுத்த கல்வியாண்டில் வகுப்புகளை துவக்குவது போல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். வருமானம் தரும் தொழில் பயிற்சிகளை மாணவ-மாணவிகள் பெறும் வகையில் மாவட்டந்தோறும் தொழிற்பயிற்சி கூடங்கள் நிறுவப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத் தலைவர் நாசே ராமச்சந்திரன் தலைமையுரையில் பேசுகையில், தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 3வது இடத்தில் யாதவர் சமூகம் கொண்டுள்ளது. எனினும், தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதிலும் அரசு பணிகளிலும் யாதவ மக்களுக்கு உரிய வாய்ப்பை அரசியல் கட்சிகளும் அரசும் வழங்காமல், இச்சமூகத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றனர். அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பை நிர்ணயிக்கும் மக்கள்தொகை மற்றும் வாக்குகளை கொண்டது யாதவ சமுதாயம்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே யாதவ சமுதாய மக்கள் சமூக பொருளாதார மற்றும் அரசியலில் வாய்ப்பும் அதிகாரமும் கிடைக்கும். முன்னதாக, தமிழகத்தில் யாதவ மக்கள் அதிகமுள்ள 50 சட்டமன்றத் தொகுதிகளை தேர்வு செய்து, அங்கு தமிழ்நாடு யாதவ மகாசபையின் கிளைகளை நிறுவி, அதிக உறுப்பினர்களை சேர்த்து, வரவிருக்கும் தேர்தல்களை சந்திக்குமளவுக்கு கட்டமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று நாசே ராமச்சந்திரன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாநில பொது செயலாளர் வேலு மனோகரன், மாநில பொருளாளர் கே.எத்திராஜ், துணை தலைவர்கள் ஏ.எம்.செல்வராஜ், மலேசியா எஸ்.பாண்டியன் இளைஞரணி பொது செயலாளர் பொட்டல் எஸ்.துரை, எம்கேஆர்.மெய்யப்பன், கே.நாகேந்திரன், என்.எஸ்.சேதுமாதவன், கே.சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post தமிழ்நாடு யாதவ மகாசபை செயற்குழுவில் யாதவ மாணவர்களுக்கு யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி அளிக்க ரூ.10 லட்சம் நிதியுதவி: மாநில தலைவர் நாசே ராமச்சந்திரன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: