17 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வரலாற்று வெற்றி; கிரிக்கெட் அணிக்கு தலைவர்கள் வாழ்த்து: முர்மு, மோடி, ராகுல், மு.க.ஸ்டாலின் புகழாரம்

பிரிட்ஜ்டவுன்: இந்திய கிரிக்கெட் அணி 2வது முறையாக டி.20 உலக கோப்பையை வென்றதை, நாடு முழுவதும் ரசிகர்கள் விடியவிடிய பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஐசிசி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 9வது டி.20 உலக கோப்பை தொடர் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்தது.

இதில் நேற்று பிரிட்ஜ்டவுனில் நடந்த பைனலில் இந்தியா-தென்ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 2007ம் ஆண்டு முதல் டி.20 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, 2014ம் ஆண்டு பைனலில் இலங்கையிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் 17 ஆண்டுக்கு பிறகு டி.20 உலககோப்பையை 2வது முறையாக வென்றது.

வெற்றிக்கு பின் மைதானத்தில் இந்திய வீரர்கள் உணர்ச்சி பொங்க காணப்பட்டனர். குறிப்பாக கேப்டன் ரோகித்சர்மா, ஆல்ரவுண்டர் ஹர்தி்க் பாண்டியா ஆனந்தகண்ணீர் சிந்தினர். விராட் கோஹ்லி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட வீரர்கள் மைதானத்தில் நடனமாடி மகிழ்ந்தனர். ஐசிசி தொடர் ஒன்றில் இந்தியா 11 ஆண்டுக்கு பின் பட்டம் வென்றுள்ளது. கடைசியாக 2013ம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடரில் பட்டம் வென்றிருந்தது. இந்தியாவின் இந்த வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். கடைசி பந்து வரை பரபரப்பான போட்டியில் வெற்றிக்கு பின் நள்ளிரவில் சாலைகளில் திரண்ட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ஆடிப்பாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர். டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, லக்னோ, கொல்கத்தா என நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விடியவிடிய கொண்டாட்டங்கள் களை கட்டியது.

பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், சச்சின் டெண்டுல்கர், டோனி என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி திரவுபதி முர்மு வௌியிட்ட பதிவில், ‘டி20 உலகக் கோப்பை போட்டியில் வென்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த போட்டியில் வீரர்கள் தங்களது முழு திறன்களையும் வெளிப்படுத்தி உள்ளனர். அசாதாரண வெற்றியை கொடுத்த இந்திய அணிக்கு வாழ்த்துகள். உங்களால் நாங்கள் பெருமை கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘இந்திய கிரிக்கெட் அணியால் பெருமிதம் கொள்கிறோம். இந்தப் போட்டி வரலாற்றுச் சிறப்புமிக்கது’ என்று கூறியுள்ளார். மேலும் விராட்கோலி, கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட் ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், `உலகக் கோப்பை போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, ராகுல் ட்ராவிட்டின் பங்களிப்பு சிறப்பானது’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது: முழுமையான ஆதிக்கத்துடன், நம் இந்திய அணி வீரர்கள் இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளதைக் கொண்டாடுவதில் உற்சாகமடைகிறேன். சவாலான சூழல்களிலும் இணையற்ற அறிவுக்கூர்மையை வெளிப்படுத்திய நமது இந்திய அணி, தோல்வியே காணாமல் உலகக் கோப்பைத் தொடரை நிறைவுசெய்துள்ளது. இந்திய அணிக்குப் பாராட்டுகள்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்ட பதவில், ‘17 ஆண்டுகளுக்குப் பின்னர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள். இந்த போட்டியில் விராட் கோலி, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சிறப்பாக ஆடினர். அபாரமான வெற்றியை கண்டு, ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறோம். உங்களது சாதனைகள் எப்போதும் கொண்டாடப்படும். வரும் போட்டிகளிலும் உங்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் ஜெர்சியில் சேர்க்கப்படும் ஒவ்வொரு நட்சத்திரமும், நம்நாட்டின் குழந்தைகள் தங்களின் கனவை அடைய ஒருபடி ஊக்கம் அளிக்கும். இந்தியா தனது 4வது நட்சத்திரத்தை பெற்றது என குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் கேப்டன் டோனி, “உலக கோப்பை சாம்பியன்கள் 2024. எனது இதய துடிப்பு உச்சத்தில் இருந்தது. உலக கோப்பையை கொண்டு வந்ததற்கு மிகப்பெரிய நன்றி’’ என தெரிவித்துள்ளார். இதேபோல் சினிமா நட்சத்திரங்கள், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

The post 17 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வரலாற்று வெற்றி; கிரிக்கெட் அணிக்கு தலைவர்கள் வாழ்த்து: முர்மு, மோடி, ராகுல், மு.க.ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: