ஐசிசி உலக கோப்பை டி20 பைனல்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி; 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அசத்தல்

பிரிட்ஜ்டவுன்: தென் ஆப்ரிக்க அணியுடனான ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் பைனலில், இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பார்படாஸ், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ரோகித், விராத் கோஹ்லி இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். மார்கோ யான்சென் வீசிய முதல் ஓவரில் கோஹ்லி 3 பவுண்டரிகளை விளாசினார். மகராஜ் வீசிய 2வது ஓவரின் முதல் 2 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய ரோகித், 4வது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, சூரியகுமார் 3 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் விக்கெட் கீப்பர் கிளாசன் வசம் பிடிபட்டார்.

இந்தியா 4.3 ஓவரில் 34 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், கோஹ்லி அக்சர் படேல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடியது. ஒரு முனையில் கோஹ்லி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த, அரை சதத்தை நெருங்கிய அக்சர் 47 ரன் (31 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். கோஹ்லி அக்சர் 4வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து கோஹ்லியுடன் ஷிவம் துபே இணைந்தார். 48 பந்தில் அரை சதம் அடித்த கோஹ்லி 76 ரன் (59 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), துபே 27 ரன் (16 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். ஜடேஜா 2 ரன் எடுத்து கடைசி பந்தில் அவுட்டானார். இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மகராஜ், அன்ரிச் தலா 2, யான்சென், ரபாடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 20 ஓவரில் 177 ரன் எடுத்தால் முதல் முறையாக உலக சாம்பியனாகலாம் என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. ஹெண்ட்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம் தலா 4 ரன் எடுத்து வெளியேற, தென் ஆப்ரிக்காவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. டி காக் ஸ்டப்ஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். ஸ்டப்ஸ் 31 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அக்சர் சுழலில் கிளீன் போல்டானார். டி காக் 39 ரன் (31 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அர்ஷ்தீப் வேகத்தில் குல்தீப் வசம் பிடிபட ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. ஆனால், அக்சர் வீசிய 15வது ஓவரில் கிளாஸன் பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ள, அந்த ஓவரில் மட்டும் 24 ரன் கிடைத்தது. இதனால் மீண்டும் தென் ஆப்ரிக்கா கை ஓங்கியது. கிளாஸன் 52 ரன் (27 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஹர்திக் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பன்ட் வசம் பிடிபட, இந்திய வீரர்கள் உற்சாகம் அடைந்தனர்.

பும்ரா 17வது ஓவரை துல்லியமாக வீசி 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்ததுடன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி நெருக்கடி கொடுக்க, கடைசி 2 ஓவரில் தென் ஆப்ரிக்காவுக்கு 20 ரன் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் வீசிய 19வது ஓவரில் 4 ரன் மட்டுமே கிடைத்தது. இதனால் பரபரப்பான கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்காவுக்கு 16 ரன் தேவை என்ற நிலையில், ஹர்திக் வீசிய முதல் பந்தை மில்லர் சிக்சருக்கு தூக்க, பவுண்டரி லைனில் நின்றிருந்த சூரியகுமார் அற்புதமாகப் பிடித்து அவுட்டாக்கினார் (21 ரன்). 5வது பந்தில் ரபாடா ஆட்டமிழந்தார். கடைசி வரை திக் திக் த்ரில்லராக அமைந்த இப்போட்டியில் தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து, 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்திய பந்துவீச்சில் ஹர்திக் 3, பும்ரா, அர்ஷ்தீப் தலா 2, அக்சர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

7 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா 2வது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த தொடரில் இந்தியா ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளைத் தொடர்ந்து டி20 உலக கோப்பையை 2 முறை வென்ற அணியாக இந்தியா சாதனை படைத்தது.

சர்வதேச டி20ல் ஓய்வு!
இந்திய அணி 2வது முறையாக ஐசிசி டி20 உலக கோப்பையை வெல்ல உதவிய பைனலின் ஆட்ட நாயகன் விராத் கோஹ்லி, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் 125 போட்டியில் 4188 ரன் (அதிகம் 122*, சராசரி 48.69, சதம் 1, அரை சதம் 38) விளாசியுள்ளார்.

ரோகித் நம்பிக்கையை காப்பாற்றிய கோஹ்லி!
நடப்பு தொடரில் லீக் சுற்று, சூப்பர்-8 சுற்று மற்றும் அரையிறுதி வரை மொத்தம் 7 இன்னிங்சில் 75 ரன் மட்டுமே (1, 4, 0, 24, 37, 0, 9) சேர்த்திருந்த கோஹ்லி, நேற்று பைனலில் சிறப்பாக விளையாடி 76 ரன் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். அவர் மொத்தம் 8 இன்னிங்சில் 151 ரன் (அதிகம் 76, சராசரி 18.87, அரைசதம் 1) எடுத்தார். கோஹ்லி தொடர்ச்சியாக தடுமாறி வருகிறாரே என்ற கேள்விக்கு, ‘அவர் பைனலுக்காக காத்திருக்கிறார். அதில் நிச்சயமாக அசத்துவார்’ என தெரிவித்திருந்தார். அவரது நம்பிக்கையை கோஹ்லி காப்பாற்றிவிட்டார்.

The post ஐசிசி உலக கோப்பை டி20 பைனல்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி; 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: