குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு பேச்சிப்பாறை அணையில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் மறுகாலில் திறப்பு மலைக்கிராமங்கள் துண்டிப்பு

நாகர்கோவில், ஜூன் 28: குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் மறுகாலில் திறந்துவிடப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்றும் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தன. நேற்று காலை வரை அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 52.4 மி.மீ மழை பெய்திருந்தது.

கோதையாறு, குற்றியாறு, மைலாறு, மோதிரமலை, கிளவியாறு என முக்கியமான மலை பகுதிகள் வழியாக பாயும் அனைத்து ஆறுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. கோதையாறு நீர்மின் நிலையம் 2ல் உற்பத்திக்கு பயன்படும் 110 அடி கொள்ளளவு உள்ள கீழ் கோதையாறு அணை நிரம்பி வழிகிறது. மழை காரணமாக மலைப்பகுதிகளில் திரும்பிய பக்கம் எல்லாம் வெள்ளம் பாய்ந்து செல்கிறது. இதனால் சிறிய பாலங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. குற்றியாறு இரட்டை அருவி, கோதையாறு அருவி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள எல்லா அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குற்றியாறு தரைப்பாலம் மூழ்கியது.

அதேபோல் கோதையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளம் திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே நேற்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே நேற்று காலை அருவியில் குளிப்பதற்காக வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.7 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3511 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 636 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. மேலும் அணையில் இருந்து 3008 கன அடி தண்ணீர் உபரியாக மறுகாலில் திறந்துவிடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.27 அடியாகும். அணைக்கு 2133 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது.

அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. சிற்றார்-1ல் 16.66 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 320 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில், 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 16.76 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 15.8 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 44.54 அடியும் நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணைக்கு 9 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 20.9 அடியாகும்.

The post குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு பேச்சிப்பாறை அணையில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் மறுகாலில் திறப்பு மலைக்கிராமங்கள் துண்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: