நாகூரில் புகழ்பெற்ற ஆண்டவர் தர்கா குளத்தில் தூய்மைப்பணி

நாகப்பட்டினம், ஜூன் 27: நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு உள்ளூர், வெளியூர் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான யாத்ரீகர்கள் வந்து செல்வார்கள். இதேபோல் நாகப்பட்டினத்திற்கு சுற்றுலா செல்பவர்களும் பிரசித்திப்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவை பார்த்து விட்டு செல்வது வழக்கம். மேலும் இஸ்லாமியர்கள் நேர்த்திக்கடன் வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நாகூர் தர்காவுக்கு வருவார்கள். இவ்வாறு நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு வந்து செல்லும் யாத்ரீகர்கள் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்ற மொட்டை அடித்து தர்காவின் பின்புறம் அமைந்துள்ள புனித குளத்தில் நீராடி செல்வார்கள். அப்போது யாத்ரீகர்கள் தாங்கள் அணிந்துள்ள ஆடைகளை விட்டுச் செல்வார்கள்.

இந்நிலையில் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா குளம் தூய்மை செய்யாமல் இருந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளத்தில் இருந்த ஏராளமான மீன்கள் செத்து மிதந்தது. மேலும் குளத்தி் பாசி படர்ந்து குளம் முழுவதும் மிதந்தது. இதனால் அப்பகுதியில் ஒரு விதமான துர்நாற்றம் வீசியது. இது நாகூர் தர்காவிற்கு வரும் யாத்ரீகர்களை முகம் சுளிக்க வைத்தது. இதையடுத்து நாகூர் ஆண்டவர் தர்கா நிர்வாகம் சார்பில் குளத்தை சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக புனித குளத்தில் இருந்து ராட்சத மோட்டர்களை வைத்து இரவு, பகலாக தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. இதன் பின்னர் குளத்தில் யாத்ரீகர்கள் விட்டு சென்ற துணிகளை அகற்றினர். பின்னர் குளத்தை சுற்றியுள்ள படித்துறைகளில் படர்ந்துள்ள பாசிகளை அகற்றி தூய்மை செய்யும் பணி நடந்து வருகிறது. நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் தொடர்ந்து குளம் தூய்மை செய்யும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.

இது குறித்து நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் காஜிஉசேன்சாகிப் கூறியதாவது: நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு சொந்தமான குளத்தில் கடந்த மே மாதம் 21ம் தேதி எதிர்பாராதவிதமாக குளத்தில் உள்ள மீன்கள் இறந்து மிதந்தது. உடனே ஆட்களை வைத்து அன்றைய தினமே மீன்களை அப்புறப்படுத்தி குளம் சுத்தம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தர்கா குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்தது. இந்த பணி நடைபெறுவதால் தர்கா குளத்தில் யாத்ரீகர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் யாத்ரீகர்கள் நலன் கருதி மொட்டை அடிப்பவர்கள் குளிப்பதற்கு வசதியாக தர்கா குளத்தின் படித்துறையில் 8 பைப்புகள் அமைத்து யாத்ரீகர்கள் தடையில்லாமல் குளித்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தர்கா குளத்தில் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டதால் யாத்ரீகர்கள் விட்டு சென்ற பழைய துணி மற்றும் குப்பைகள் அகற்றி தூய்மை செய்யும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. விரைவில் யாத்ரீகர்கள் நலன் கருதி நாகூர் ஆண்டவர் தர்கா குளம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

The post நாகூரில் புகழ்பெற்ற ஆண்டவர் தர்கா குளத்தில் தூய்மைப்பணி appeared first on Dinakaran.

Related Stories: