மகளிர் குழுவினருக்கு கடனுதவி எனக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் தலைமறைவு

மதுரை, ஜூன் 27: மகளிர் குழு கடனுதவி எனக்கூறி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டதாக, பெண் மீது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மதுரை எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மேலூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்த ராணி என்பவர், இக்கிராமத்தில் உள்ள பெண்களிடம் மகளிர் சுய உதவி குழு கடன் வழங்குவதாக கூறி ஆதார், ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றை வாங்கி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலமாக கடன் உதவி பெற்றுக் கொடுத்துள்ளார். கடன் பெற்றுக் கொண்ட பெண்கள் தங்களது தவணைகளை வங்கி மற்றும் நிதி நிறுவனத்திடம் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதாக கூறி அவர்களுடைய ஆவணங்கள் முழுவதையும் ராணி பயன்படுத்தி நிதி நிறுவனங்கள் மூலமாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு தெரியாமலேயே வங்கி கடன் பெற்றதாக தெரிகிறது.

கடனுதவி வாங்கிய பின்னர் சம்மந்தபட்ட பெண்களை தொடர்பு கொண்டு தங்களது பெயரில் கடன் வாங்கி உள்ளேன் எனக் கூறி, கையெழுத்து போட்டு செல்லும்படியும், ஒவ்வொரு கடனுக்கும் ரூ.ஆயிரம் கமிஷன் தொகையும் கொடுத்து வந்துள்ளார். இதன்படி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் ஆதார், ரேஷன் கார்டு, ஏடிஎம் உள்ளிட்டவற்றைர வாங்கிக்கொண்டு, பல்வேறு கடன்களை பெற்றிருக்கிறார். இந்நிலையில் ராணி கடந்த ஒரு வாரம் முன்பு திடீரென தலைமறைவானார். இதனால் சொக்கம்பட்டி கிராமத்திற்கு வந்த பல்வேறு நிதி நிறுவன ஊழியர்கள் அங்குள்ள பெண்களை சந்தித்து அவர்களது பெயரில் வாங்கியுள்ள கடனின் தவணை தொகையை கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், இந்த பிரச்னை குறித்து மதுரை எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு வழங்கினர். மோசடியில் ஈடுபட்ட ராணியை கைது செய்வதுடன், ராணிக்கு உடந்தையாக இருந்த நிதி நிறுவன ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post மகளிர் குழுவினருக்கு கடனுதவி எனக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் தலைமறைவு appeared first on Dinakaran.

Related Stories: