பள்ளிப்பட்டு அருகே லவா ஆற்றில் ராட்சத கிணறுகள் அமைக்க எதிர்ப்பு: 2ம்கட்ட பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் உடன்பாடு


பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே, லவா ஆற்றில் ராட்சத கிணறுகள் அமைக்க கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் பொதுமக்களுடன் உடன்பாடு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளிகரம் பகுதியில் லவா ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியாம் சார்பில் 6 நீர் உறிஞ்சி ராட்சத கிணறுகள் அமைத்து பைப் லைன்கள் மூலம் ஆர்.கே.பேட்டை, திருத்தணி ஒன்றியங்களில் உள்ள 9 கிராம ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் ரூ45 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், லவா ஆற்றில் ராட்சத கிணறுகள் அமைத்து குடிநீர் எடுக்க பள்ளிப்பட்டு, வெளிகரம், திருமலைராஜ்பேட்டை, ராமச்சந்திராபுரம், சானாகுப்பம், வெங்கட்ராஜ்குப்பம், குமாராஜுபேட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வாரம் திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தீபா தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாத நிலையில் நேற்றுமுன்தினம் மாலை பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை கோட்டாட்சியர் தீபா தலைமையில் நடந்தது.மாலை 6 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உதவி நிர்வாக பொறியாளர் ஜெயசுதா, உதவி பொறியாளர் சம்பத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். கிராம மக்களின் பிரதிநிதிகளாக முன்னாள் மாவட்ட கவுன்சிலர், ரவீந்திரநாத், வெளிகரம் ஊராட்சி மன்றத் தலைவர் உமாபதி, விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜேந்திர நாயுடு, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர்கள் ஆஞ்சநேயன், சுஜாதா வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

இதில் லவா ஆற்றில் 6 நீர் உறிஞ்சி கிணறுகள் அமைத்து குடிநீர் மற்ற பகுதிகளுக்கு வழங்கினால், பள்ளிப்பட்டு பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, குடிநீருக்கு வறட்சி ஏற்படும் என்று கூறினர். இதில் கூறிய கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று லவா ஆற்றில் 3 நீர் உறிஞ்சி கிணறுகளும், கொசஸ்தலை ஆற்றில் 3 நீர் உறிஞ்சிகளும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் தீபா தெரிவித்தார். இதனால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுக்கு வந்தது.

The post பள்ளிப்பட்டு அருகே லவா ஆற்றில் ராட்சத கிணறுகள் அமைக்க எதிர்ப்பு: 2ம்கட்ட பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் உடன்பாடு appeared first on Dinakaran.

Related Stories: