மக்களவை துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே நாடாளுமன்றத்தின் மரபு : ராகுல் காந்தி பேட்டி

டெல்லி : மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்படுகிறார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓம் பிர்லா சபாநாயகர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில், மக்களவை சபாநாயகர் தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாததற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சபாநாயகர் நியமன விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை மோடி அரசு அவமதித்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து பேட்டி அளித்த ராகுல் காந்தி, “பிரதமர் மோடி ஆக்கப்பூர்வமான விவாதத்தை விரும்பவில்லை.

அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து சபாநாயகர் தேர்வில் ஒத்துழைக்க தயார் என்று தெரிவித்தோம். துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க கோரினோம், ஆனால் எந்த பதிலும் வரவில்லை .எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று மோடி கூறுகிறார் ஆனால் அவர் ஒத்துழைக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்புகொண்டு சபாநாயகர் தேர்வில் ஆதரவு அளிக்க ராஜ்நாத் கோரினார். சபாநாயகர் தேர்வில் ஒத்துழைப்பு அளிப்பதாக ராஜ்நாத்திடம் கார்கே உறுதி அளித்தார். மரபுப்படி துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர வேண்டும் என்று கார்கே கூறினார். கார்கேவுடன் மீண்டும் தொலைபேசியில் பேசுவதாக கூறிய ராஜ்நாத் சிங் இதுவரை பேசவில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மக்களவை துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே நாடாளுமன்றத்தின் மரபு : ராகுல் காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: