பெங்களூரு மாநகரின் வெவ்வேறு பகுதிகளில் 3 பேர் கொலை: போலீசார் தீவிர விசாரணை

பெங்களூரு: பெங்களூரு மாநகரில் தனித்தனியாக நடந்த சம்பவத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு கங்கம்மனகுடியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (17). இவருக்கு தாய் தந்தை இல்லை. மஞ்சுநாத் அவரின் சித்தப்பா வீட்டில் வசித்து வந்தார். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மஞ்சுநாத், அவரின் சித்தப்பாவுடன் கார்மென்ட்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்துள்ளார்.

மது குடிக்கும் பழக்கம் உடைய மஞ்சுநாத் சனிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்தபோது மது போதையில் இருந்துள்ளார். அவரின் சித்தப்பா கண்டித்தபோது வீட்டை விட்டு வெளியேறிய மஞ்சுநாத் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாத்தனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் காலி நிலத்தில் மஞ்சுநாத் சடலம் கிடந்தது. தகவலறிந்து போலீசார், சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தபோது தலையில் காயம் இருந்துள்ளது.

குப்பை குவிந்துள்ள இடத்தில் மஞ்சுநாத் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மஞ்சுநாத் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளி யார் என்பதை போலீசார் கண்டு பிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுபோல் மற்றொரு கொலை மல்லேஸ்வரத்தில் நடந்துள்ளது. மல்லேஸ்வரத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (38). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பிரேம் என்பவரின் தாயுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று மல்லேஸ்வரம் கேசி ஜெனரல் மருத்துவமனை அருகேயுள்ள பூங்காவில் பன்னீர்செல்வம் அமர்ந்து இருந்துள்ளார். அப்போது பிரேம் அங்கே வந்து, எனது தாயை எதற்காக திட்டினாய் என பன்னீர் செல்வத்திடம் சண்டையிட்டுள்ளார். அப்போது பன்னீர் செல்வத்தை கீழே தள்ளி விட்டு அவரின் தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பன்னீர் செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் கிடைத்த போலீசார், பன்னீர் செல்வத்தை கொலை செய்த பிரேமை கைது செய்தனர்.

* மூன்றாவது கொலை:
ஞானபாரதி தொட்ட கொல்லரஹள்ளியை சேர்ந்தவர் ஆனந்த் (37). பெயின்ட் தொழிலாளியான ஆனந்த்துக்கும், அவரின் தந்தை புட்டசாமி என்பவருக்கும் இடையே வாடகை பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 10.20 மணி அளவில் இதே விஷயமாக இரண்டு பேருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது , புட்டசாமி ஆனந்த்தை கத்தியால் குத்தியுள்ளார். பலத்த காயம் அடைந்த ஆனந்த் சிகிச்சைக்காக மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். பெங்களூரு ஞானபாரதி போலீசார் உடனடியாக புட்டசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெங்களூரு மாநகரின் வெவ்வேறு பகுதிகளில் 3 பேர் கொலை: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: