மக்களவைத் தேர்தலில் படுதோல்வி பினராயி விஜயனுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு வலுக்கிறது

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. சில தொகுதிகளில் இடதுசாரி கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக கருதப்படும் பல பகுதிகளில் கூட காங்கிரசுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன. முதல்வர் பினராயி விஜயனின் சொந்தத் தொகுதியான தர்மடத்தில் கூட காங்கிரசுக்குத் தான் அதிக வாக்குகள் கிடைத்தன. இந்த தேர்தல் தோல்வி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தோல்விக்கு பினராயி விஜயன் தான் காரணம் என்று சில தலைவர்கள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான தாமஸ் ஐசக், ஜி. சுதாகரன் உள்பட தலைவர்கள் பினராயி விஜயனின் மக்கள் விரோத நடவடிக்கைகள் தான் தோல்விக்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கமிட்டி கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் பினராயி விஜயனுக்கு எதிராக பெரும்பாலான தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். பினராயி விஜயனின் கைவசம் உள்ள உள்துறை சரியாக செயல்படவில்லை என்றும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, முறையாக ஓய்வூதியம் வழங்காதது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன. ஆனால் தலைவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

The post மக்களவைத் தேர்தலில் படுதோல்வி பினராயி விஜயனுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு வலுக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: