மக்களவை சபாநாயகர் யார்? ராஜ்நாத்சிங் இல்லத்தில் ஆலோசனை

புதுடெல்லி: மக்களவை புதிய சபாநாயகர் யார் என்பது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இல்லத்தில் பா.ஜ மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். 18வது மக்களவை தேர்தல் முடிந்து புதிய அவை ஜூன் 24ம் தேதி கூட இருக்கிறது. இரண்டு நாட்கள் புதிய எம்பிக்கள் பதவி ஏற்ற பிறகு ஜூன் 26ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு குறித்து இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

இதுவரை மக்களவை சபாநாயகர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த முறையும் அதே நடைமுறையை பின்பற்ற பா.ஜ முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் தெலுங்குதேசம் கட்சி சபாநாயகர் பதவியை கேட்டு வருகிறது. ஆனால் பா.ஜ தரப்பு 17வது மக்களவை சபாநாயகராக இருந்த ஓம்பிர்லாவை மீண்டும் சபாநாயகராக்க விரும்புகிறது. இந்த இழுபறிக்கு மத்தியில் மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசிக்க பாஜ உயர்மட்ட தலைவர்களின் கூட்டம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் பா.ஜ மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மனோகர் லால் கட்டார், பூபேந்தர் யாதவ், வீரேந்திர குமார், பியூஷ் கோயல், அன்னபூர்ணா தேவி, எஸ் ஜெய்சங்கர், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் லாலன் சிங், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதே போல் மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான கட்சியின் வியூகம் குறித்து விவாதிக்க நேற்று மாலை மகாராஷ்டிர பாஜ மையக் குழுவின் தனிக் கூட்டம் நடந்தது. பாஜ தலைவர் ஜேபி நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பா.ஜ மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவான்குலே, ஆஷிஷ் ஷெலர், எம்பி அசோக் சவுகான், அமைச்சர் கிரிஷ் மகாஜன் மற்றும் பிற தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

The post மக்களவை சபாநாயகர் யார்? ராஜ்நாத்சிங் இல்லத்தில் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: