மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயண டோக்கன் 21ம் தேதி முதல் வழங்கப்படும்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு

 

அம்பத்தூர்: சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்கான டோக்கன்கள் வரும் 21ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு ஜூலை 2024 முதல், டிசம்பர் 2024 வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை இணைப்பில் உள்ள 42 மையங்களில், வரும் 21ம் தேதி முதல், அடுத்த மாதம் 31ம் தேதி வரை தினசரி காலை 8 மணி முதல், இரவு 7.30 மணி வரை வழங்கப்படும்.

அதன் பின்னர், இவை வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும். சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்கள் இத்தகைய இலவச பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதிதாக பெற இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் 2 வண்ண புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

அதன்படி, மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள் அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தி.நகர், சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை, மத்திய பணிமனை, சென்ட்ரல் ரயில் நிலையம், பிராட்வே, குரோம்பேட்டை-1, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி எஸ்டேட், அய்யப்பன்தாங்கல், வடபழனி, கே.கே.நகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர்,

கோயம்பேடு, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் ஓ.டி, ஆவடி, அயனாவரம், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை-1, சுங்கச்சாவடி, எண்ணூர், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், மாதவரம், பாடியநல்லூர், செங்குன்றம், தாம்பரம் – மெப்ஸ், பூந்தமல்லி, பெரம்பூர், வள்ளலார் நகர், செம்மஞ்சேரி, திருவொற்றியூர், கிளாம்பாக்கம், குன்றத்தூர் உள்ளிட்ட பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயண டோக்கன் 21ம் தேதி முதல் வழங்கப்படும்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: