கல்பாக்கம் அருகே இசிஆர் சாலை பாலத்தில் பள்ளம்: விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே இசிஆர் சாலை பாலத்தில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். சென்னை திருவான்மியூர் முதல் புதுச்சேரி வழியாக கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. வேகமாகவும், போக்குவரத்து இடைஞ்சல் இன்றியும் செல்ல முக்கிய அரசியல் பிரமுகர்கள் முதல் தொழிலதிபர்கள் மற்றும் சாமானியவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த சாலையைதான் விரும்பி பயன்படுத்தி பயணிக்கின்றனர்.

இந்நிலையில் கல்பாக்கம் அடுத்த வாயலூர் பாலாற்றின் குறுக்கே தரை மட்டத்தில் போடப்பட்டிருந்த பழமையான பாலத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் மழைக் காலத்தில் பாலாற்றில் வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் இந்த பாலம் மூழ்கி விடும். ஆற்று வெள்ளநீர் வடியும் வரை பழமையான பாலம் மார்க்கத்தில் போக்குவரத்து தடை செய்யப்படும்.

இது தொடர்கதையாக இருந்ததால் இந்த பழமையான பாலத்தை அகற்றிவிட்டு புதிய உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து பொது மக்களும், வாகன ஓட்டிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பழமையான பாலத்திற்கு அருகில் புதிய உயர் மட்ட பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் பாலத்தின் நடுப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பள்ளம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பள்ளம் பெரிய அளவில் ஆகி விட்டதால் அந்த பள்ளத்தில் சிக்கி வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துரித கதியில் பாலத்தில் உள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்து சீரமைக்க வேண்டும் என்று பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கல்பாக்கம் அருகே இசிஆர் சாலை பாலத்தில் பள்ளம்: விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: