விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்: பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

சென்னை: விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா களமிறக்கப்பட்டுள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான க.பொன்முடி, கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆர்.லட்சுமணன் எம்எல்ஏ ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் கடந்த 14ம் தேதி விக்கிரவாண்டியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் அந்த தொகுதி கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தலா 20 ஆயிரம் ஓட்டுகளை பிரித்து கொடுத்து அதன் அடிப்படையில் தேர்தல் பணியாற்ற தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியத்தில் இடைத்தேர்தல் வேலையை முடுக்கி விட்டு உள்ளனர்.

அதே நேரத்தில் விக்கிரவாண்டி தேர்தலில் பாமக வேட்பாளராக சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயாவும் நிறுத்தப்பட்டுள்ளதால் மும்முனை போட்டி நிலவுகிறது. வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னர் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கும். அதே நேரத்தில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்கிறது. சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்ததும் தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்க தொடங்கும்.

அதே நேரத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். சட்டசபை கூட்டம் முடிந்ததும் விக்கிரவாண்டி தொகுதியில் ஒருநாள் அவர் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் திமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். அதேபோல் பாமக வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ், அன்புமணி பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் சீமானும் பிரசாரம் செய்ய தயாராகி வருகிறார்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்: பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் appeared first on Dinakaran.

Related Stories: