தென் திருப்பதி- திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், படாளம் அருகே உள்ள தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருமலை வையாவூர் அலர்மேல் மங்கா நாயகா சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவையொட்டி கோவில் ராஜகோபுரம், சன்னதிகள், விமானங்கள் ஆகியவை மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இதனால் இரவு நேரங்களில் மலைக்கோயில் வண்ண விளக்குகளால் ஜொலிஜொலித்தன. இந்த கும்பாபிஷேக விழாவானது சனிக்கிழமை விசேஷ ஆராதனம், புண்யாஅவாசனம், யாகசாலை வாஸ்து யாகம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதனையடுத்து அன்று மாலை 5 மணி அளவில் எஜமானர்கள் சங்கல்பம், அக்னி பிரதிஷ்டை, முதல் கால யாக பூஜை, பூரணாதி, தீபாராதனை, சாற்றுமுறை, பிரசாத விநியோகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 2ம் கால யாக பூஜை, பூரணாதி, தீபாராதனை, அக்னி பாராயணம், கும்பாராதனம், மகா சாந்தி திருமஞ்சனம், கும்பம் புறப்பாடு, மகாபிஷேகம், 3ம் கால யாக பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  கும்பாபிஷேக தினமான நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம் சுப்ரபாதம், மூர்த்தி யாகம், 4ம் கால யாக பூஜை, மகா பூரணாதி, யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் பாதயாத்திரையாக மலை உச்சியில் உள்ள கோவிலுக்கு பஜனை பாடியபடியும், கோவிந்தா… கோஷமிட்ட படியும் வந்தனர். இதனைத் தொடர்ந்து 9.30 மணி முதல் 10.30 மணிக்குள்ளாக அனைத்து விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்கத்தில் உள்ள கலசங்களுக்கு பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

கோயிலைச் சுற்றி கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா… நாராயணா… என கோஷமிட்டு கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்தனர். இதனையடுத்து மினி மோட்டார் மூலம் பக்தர்கள் மீது கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் பிரசன்ன வெங்கடேச பெருமாள், பரிவார சன்னதி, மூல மூர்த்திகள் பிரதிஷ்டை, மகா தீபாராதனை, வேதப்ரந்த சாற்று முறை, அர்ச்சனை எஜமானர்கள் மரியாதை, தீர்த்த பிரசாத விநியோகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த கும்பாபிஷேக விழாவில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம், கலெக்டர் அருண் ராஜ் ஆகியோருக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், விழா குழுவினரும் பூரண கும்பம் மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து மூலவர் சன்னதி சென்று பிரசன்ன வெங்கடேச பெருமாளை வணங்கினர்.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி இயக்குனர் அண்ணாமலை ரகுபதி, பொறியியல் கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை, மாவட்டத் துணைச் செயலாளர் கோகுலக்கண்ணன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மாலை 6 மணியளவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கள்ளபிரான் உற்சவ மூர்த்தி திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையின் இணை இயக்குனர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், இன்ஸ்பெக்டர் சத்தியபாமா, அறங்காவலர் குழு தலைவர் தினேஷ், முன்னாள் அறங்காவலர் ஏழுமலை, செயல் அலுவலர் மேகவண்ணன், பட்டச்சாரியார் பாலாஜி உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post தென் திருப்பதி- திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: