அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கம் தமிழக காவல்துறை அணி பதக்கங்கள் குவிப்பு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் நடக்கும் அகில இந்திய அளவிலான மகளிர் காவலர் துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் நாளான நேற்று தமிழ்நாடு காவல்துறை அணி பதக்கங்களை குவித்தது. அகில இந்திய அளவிலான மகளிர் காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டியை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் நேற்று முதல் வரும் 19ம் தேதி வரை போட்டிகள் நடக்கிறது.

இப்போட்டியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறையினர், மத்திய காவல் அமைப்பினர் என 30 அணிகளை சார்ந்த சுமார் 634 துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிடுகிறார்கள். முதல் நாளான நேற்று கைதுப்பாக்கி சுடும் போட்டி எண்.1 – 15 கஜம் ஸ்குவாட்டிங் போட்டியில் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனை காவலர் பாராமிலா முதல் இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை உதவி ஆய்வாளர் துர்கா 2வது இடத்தையும், அசாம் காவல்துறை வீராங்கனை காவலர் இட்டுபுயான் 3வது இடத்தையும் பிடித்தனர்.

ரைபிள் சுடும் போட்டி எண்.1- 100 கஜம் ஸ்டான்டிங் போட்டியில், இந்தோ- திபெத்திய எல்லை காவல் படை வீராங்கனை வெர்சா ரவாத் முதல் இடத்தையும், குஜராத் காவல்துறை வீராங்கனை நிமிஷாபென் கே ராவாலியா இரண்டாவது இடத்ைதயும், தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை தலைமை காவலர் ராதிகா 3வது இடத்தையும் பிடித்தனர். கைதுப்பாக்கி சுடும் போட்டி எண்.2- 25 கஜம் குயிக் ரிப்ளெக்ஸ் போட்டியில், எல்லை பாதுகாப்பு படை வீராங்கனை காவலர் பாராமிலா முதல் இடத்தையும், எல்லை பாதுகாப்பு படை வீராங்கனை காவலர் மீனாட்சி சுந்தர் இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை தலைமை காவலர் க.பாரதி 3வது இடத்தையும் பிடித்தனர்.

ரைபிள் சுடும் போட்டி எண்.2 – 200 கஜம் நீலிங் போட்டியில், அசாம் ரைப்பிள்ஸ் வீராங்கனை காவலர் மட்டா வதி சாந்தி பால் முதல் இடத்தையும், எல்லை பாதுகாப்பு படை வீராங்கனை காவலர் சுனிதா 2வது இடத்தையும், இந்தோ- திபெத்திய எல்லை காவல்படை வீராங்கனை நிர்மலா தாரகி 3வது இடத்தையும் பிடித்தனர்.

The post அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கம் தமிழக காவல்துறை அணி பதக்கங்கள் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: