திருப்பத்தூரில் 12 மணி நேரம் மக்களை அச்சுறுத்திய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்: ஆந்திர வனப்பகுதியில் விடப்பட்டது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர மையப்பகுதியில் கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் மேரி இமாகுலேட் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் புகுந்த சிறுத்ைத, பள்ளியின் நுழைவாயிலில் கட்டிடத்திற்கு பெயின்ட் அடித்துக்கொண்டிருந்த வேலுவை (47) தாக்கி விட்டு தப்பியது. இதற்கிடையே அந்த சிறுத்தை திருப்பத்தூர் ரயில் நிலையம் வழியாக 2 கி.மீ தொலைவில் உள்ள தனியார் கார் ஷெட்டில் சென்று பதுங்கியது.

அங்கிருந்த காரை எடுக்க முயன்ற 5 பேர் சிறுத்தையை பார்த்ததும் காருக்குள் அமர்ந்து கதவை மூடிக் கொண்டனர். சிறுத்தை வெளிவராமல் இருக்க அப்பகுதியினர் கார் ஷெட்டை இழுத்து மூடிவிட்டனர். இதனால் காருக்குள் 5 பேரும் தவித்தபடி இருந்தனர். தகவலறிந்த திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்பி ஆல்பர்ட் ஜான், வனச்சரகர் சோழராஜன் ஆகியோர் சென்று சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இரவு 9 மணியளவில் வனத்துறையை சேர்ந்த மயக்கவியல் நிபுணர் சுகுமார் தலைமையிலான குழுவினர் கூண்டு, துப்பாக்கி, மயக்க ஊசி உள்ளிட்ட உபகரணங்களுடன் ஏணி மூலம் உள்ளே சென்றனர். காரில் சிக்கியிருந்த 5 பேரையும் பத்திரமாக மீட்டனர். அப்போது சிறுத்தை ஒரு காருக்கு அடியில் தலையை மட்டும் வெளியே நீட்டியபடி படுத்திருந்தது. அதிகாலை சுமார் 3 மணியளவில் மயக்கவியல் நிபுணர் சுகுமார் தரையில் பதுங்கியபடி சென்று சிறுத்தையின் தொடை பகுதியில் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்தினார்.

சில நிமிடங்களில் சிறுத்தை மயங்கியது. இதையடுத்து சிறுத்தையை மீட்டு கூண்டில் அடைத்தனர். நேற்றுமுன்தினம் மாலை 4 மணியில் இருந்து 12 மணி நேரம் பொது மக்களை அச்சுறுத்தி விடிய, விடிய போக்குகாட்டிய சிறுத்தை பிடிபட்டதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதையடுத்து அதிகாலையில் சிறுத்தையை கூண்டுடன் தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு கூண்டை திறந்தவுடன் சீறிப்பாய்ந்த சிறுத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

The post திருப்பத்தூரில் 12 மணி நேரம் மக்களை அச்சுறுத்திய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்: ஆந்திர வனப்பகுதியில் விடப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: