திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் பைப்லைன் அமைக்கும் பணி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ரூ.30 கோடி மதிப்பீட்டிலான பைப்லைன் அமைக்கும் பணி நேற்று தொடங்கி நடந்து வருகிறது. திருக்கழுக்குன்றம் பேருராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு தாமதமின்றி விரைவில் குடிநீர் வழங்கும் விதமாக தரமான பைப்லைன் அமைக்க வேண்டும் என்று திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் அரசுக்கும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்ட வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் தரமான பைப்லைன் அமைக்கும் திட்டத்திற்கான பணிகளை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, திருக்கழுக்குன்றம் பேருராட்சிக்கு உட்பட்ட சுமார் 65 கிமீ தூரத்திற்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் மூலம் தரமான உயர் அடர்த்தி கொண்ட பைப்லைன் அமைக்கும் பணியை நேற்று திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதில், பேரூராட்சி கவுன்சிலர் ரேணுகா தனசேகர், திமுக நிர்வாகிகள் ரமேஷ், ராஜி, மனோகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் பைப்லைன் அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Related Stories: