நாகர்கோவிலில் போதையில் தகராறு டாஸ்மாக் பார் உரிமையாளர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல் ரவுடி உள்பட 4 பேர் கைது

நாகர்கோவில், ஜூன் 15: நாகர்கோவில் கோட்டார் பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் இளையபாரதி (33). இவர், நாகர்கோவில் ஏ.ஆர். கேம்ப் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உரிமம் பெற்று பார் நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் மாலையில் இந்த மதுக்கடை பாருக்கு 4 பேர் மது அருந்த வந்தனர். பின்னர் போதையில் இவர்களுக்குள் மாறி, மாறி சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர். இதை பார்த்த இளையபாரதி, பாரில் தகராறு செய்யாதீர்கள். திண்பண்டங்களுக்கான பணத்தை கொடுத்து விட்டு கிளம்புங்கள் என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், எங்களை எப்படி நீ கேள்வி கேட்பாய் என கூறி பீர் பாட்டிலால் தலையில் அடித்தனர். இதில் தலையின் இடது பக்கம் இளைய பாரதிக்கு ரத்த காயம் ஏற்பட்டது. முகத்திலும் ரத்த காயம் உண்டானது. இதை பார்த்த பார் ஊழியர்கள் ஓடி வந்து அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். அவர்களையும் மிரட்டினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். படுகாயம் அடைந்த இளையபாரதியை, நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நாகர்கோவில் தளவாய்புரத்தை சேர்ந்த மைக்கேல் ஜெபின் (27), ராமன்புதூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (26), வடசேரி ஆர்.சி. தெருவை சேர்ந்த சிவக்குமார் (19), ராமன்புதூரை சேர்ந்த சுஜின் (28) என்பது தெரிய வந்தது. இவர்கள் மீது கொலை முயற்சி உள்பட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கோட்டார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ. சத்யசோபன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

The post நாகர்கோவிலில் போதையில் தகராறு டாஸ்மாக் பார் உரிமையாளர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல் ரவுடி உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: