மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பல அடுக்கு மாடிகளை கொண்ட வணிக வளாகத்தில் தீ விபத்து!

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பல அடுக்கு மாடிகளை கொண்ட வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட உடன் வணிக வளாகத்தில் இருந்த ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். தீ வேகமாக பரவுவதால் வணிக வளாகத்திலுள்ள கண்ணாடி ஜன்னல்களை உடைத்து பொதுமக்களை வெளியேற்றி வருகின்றனர். மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் அக்ரோபோலிஸ் வணிக வளாகம் அமைந்துள்ளது.

மொத்தம் 21 மாடிகளைக் கொண்ட இந்த வணிக வளாகத்தின் 3-வது மாடியில் இன்று மதியம் 12.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் அங்குள்ள புத்தக கடையில் பற்றி எரிந்த தீ, பின்னர் மளமளவென மற்ற இடங்களுக்கு பரவத் தொடங்கியது. இது குறித்து தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே வணிக வளாகத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இதனால் இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கட்டிடத்தின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து, உள்ளே சூழ்ந்திருந்த கரும்புகையை வெளியேற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பல அடுக்கு மாடிகளை கொண்ட வணிக வளாகத்தில் தீ விபத்து! appeared first on Dinakaran.

Related Stories: