வேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குடியரசு கட்சி தலைவரின் வைர மோதிரம் திருட்டு

வேலூர்: வேலூரில் நடந்த இந்திய குடியரசு கட்சி ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசனின் வைர மோதிரம் திருட்டு போனது. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த அம்பேத்கரின் உருவச்சிலை அகற்றப்பட்டதாக கூறி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நேற்று மதியம் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான செ.கு.தமிழரசன் தலைமை தாங்கினார்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்ற நிலையில், இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசன் தனது ஆதரவாளர்களுடன் அப்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மதிய உணவருந்த சென்றுள்ளார். உணவருந்தி விட்டு கைகளை கழுவ சென்றவர் தனது கைவிரலில் அணிந்திருந்த வைர மோதிரம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வைர மோதிரம் ஆர்ப்பாட்டத்திலோ அல்லது ஓட்டலில் உணவருந்த செல்வதற்கு முன்பு கைகளை கழுவும்போதோ நழுவி விழுந்திருக்கலாம். அப்போது அதை யாரோ களவாடி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதற்கேற்ப ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, யாரோ ஒருவர் சந்தேகப்படும் வகையில் கைகளை கழுவும் இடத்தில் கீழே கிடந்த எதையோ எடுத்து செல்வது தெரிய வந்தது.

இதுகுறித்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் செ.கு.தமிழரசன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

The post வேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குடியரசு கட்சி தலைவரின் வைர மோதிரம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: