வாடகை வீட்டில் தேர்தல் பணிமனை அமைக்க போலி ஆவணம் தயாரித்த வழக்கில் பாஜ மண்டல தலைவர் கைது: சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது விசாரணையில் அம்பலம்

அம்பத்தூர், ஜூன் 14: சென்னை திருமங்கலம் பகுதியில் வாடகை வீட்டில் தேர்தல் பணிமனை அமைக்க போலி ஆவணம் தயாரித்த வழக்கில் கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த பாஜ மண்டல தலைவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஷோபனா(55), என்பவருக்கு, அதே பகுதி எச்-பிளாக் 6வது மெயின் ரோட்டில் அடுக்குமாடி வீடு உள்ளது. இந்த வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாஜ பிரமுகரான மீனாட்சி(38) என்பவர் வாடகைக்கு குடியேறினார். அப்போது, வீட்டின் கீழ் தளத்தில் தேர்தல் பணிமனையை திறந்தார். எவ்வித முன் அனுமதியும் பெறாமல் வீட்டில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டதை அறிந்த ஷோபனா, மீனாட்சியிடம் இதுபற்றி கேள்வி எழுப்பினார்.

அப்போது மீனாட்சி, தனது அரசியல் செல்வாக்கை வைத்து ஷோபனாவை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஷோபனா, திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், வாடகை வீட்டில் தேர்தல் பணிமனை திறக்க போலி ஆவணங்கள் தயாரித்து, உரிமையாளரின் கையெழுத்திட்டு மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 5 பிரிவுகளின் கீழ் போலீசார் மீனாட்சியை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவான வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஜ மண்டல தலைவர் மருதுபாண்டியை போலீசார் தேடி வந்தனர். கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த மருதுபாண்டி, வில்லிவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு ரகசியமாக வந்திருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருமங்கலம் போலீசார் நேற்று அதிகாலை வில்லிவாக்கம் பகுதிக்கு விரைந்து சென்று வீட்டில் பதுங்கி இருந்த மருதுபாண்டியை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.அதில், கைது செய்யப்பட்ட பாஜ மண்டல தலைவர் மருதுபாண்டி சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. மேலும், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் பாஜ மண்டல தலைவர் மருதுபாண்டியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜ மண்டல தலைவர் கைது செய்யப்பட்டதை அறிந்த நிர்வாகிகள் திருமங்கலம் காவல் நிலையம் முன்பாக கூடியதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post வாடகை வீட்டில் தேர்தல் பணிமனை அமைக்க போலி ஆவணம் தயாரித்த வழக்கில் பாஜ மண்டல தலைவர் கைது: சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது விசாரணையில் அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: