பிறந்த வீட்டையும் புகுந்த வீட்டையும் எந்த சூழலில் பெண்கள் விட்டுத் தருவதில்லை?

புகுந்த இடத்தில் ஒரு பெண் தனக்கு ஏற்படும் எவ்விதமான சிரமங்களையும் பொறுத்துக்கொள்ளவே செய்வாள். கணவனோ, கணவனைச் சார்ந்தவர்களோ தன்னையோ தன் மகனையோ குறித்துப் பேசுவதையும் பொறுத்துக்கொள்வாள். கடந்துவிடுவாள். ஆனால், அவருடைய பிறந்தகத்தைப் பற்றி, குறிப்பாக பெற்றோர்களைப் பற்றி, எந்தவிதமான பழிச் சொல்லையும் கேட்க விரும்பமாட்டாள். அப்பொழுது அவள் எதிர்மறையாகச் செயல்பட ஆரம்பித்துவிடுவாள். இது ஒரு சாதாரணமான உளவியல். அதனால்தான் சில பேர் மனைவியை கேலி செய்யும் பொழுது, அவளுடைய உணர்ச்சியைத் தூண்டி, கோபமடையும் வண்ணம், அவளுடைய தந்தையைப் பற்றியோ, தாயைப்பற்றியோ, உறவினர்களைப் பற்றியோ குறைவாகப் பேசும் பொழுது, அதுவரை ஓரளவு பொறுமை காத்தவள், பொறுமையை இழந்து முழுமையான வலிமையுடன் சண்டை போட ஆரம்பித்து விடுகிறாள்.அது மட்டும் அல்ல, அதன் பிறகு அவளுடைய திரிந்த மனநிலையை, புகுந்த வீட்டுக்கு அனுசரணையாக மாற்றுவது என்பது மிக எளிதாக நடக்கக்கூடிய செயல் அல்ல.

திரிந்த பால் மறுபடியும் பழைய நிலைக்கு வராது என்பது போலத் தான். பிறந்த இடத்தைப் பற்றிய அவமதிப்பு ஒரு பெண்ணுக்கு நேர்ந்து விட்டால், அவள் அதை எளிதில் விட்டுத் தருவதில்லை. புராணத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். மாமனார் தட்சன் நடத்தும் யாகத்திற்குச் செல்ல வேண்டாம்; தன்னை அவன் அவமதிக்கிறான் என்று சிவபெருமான் சொல்லியும் கேட்காமல் பார்வதி தன் தந்தையின் யாகத்தைக் காணச் செல்கிறாள். அங்கே தந்தையாலும் அவள் அவமதிக்கப்படுவதால் கோபிக்கிறாள். தட்சனின் யாகத்தையே அழிக்கிறாள்.இது இன்னொரு கோணம். அதாவது ஒரு பெண் பிறந்த இடத்தில், தான் புகுந்த இடத்தைப் பற்றியோ, தன் கணவனைப் பற்றியோ, தனது தந்தையோ தாயோகூட தகாத முறையில் பேசுவதை ஏற்றுக் கொள்வதில்லை.

அப்பொழுது அவள் பிறந்தகத்தையே எதிர்க்கத் துணிந்து விடுகிறாள். இந்த இரண்டு உளவியல் நிலை களையும் நாம் உற்று நோக்கினால்தான், கைகேயி, மந்தரையால் எப்படி திரிந்து போனாள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.‘‘தசரதன் உனக்குத் துரோகம் செய்துவிட்டான், அவன் வேண்டுமென்றே உனக்கு எதிராக நடந்து கொள்ளுகிறான். உன் மகனுக்கு பட்டம் தர அவன் விரும்பவில்லை. பட்டம் கிடைக்காததால் உன் மகன் சிரமப்படுவான்.’’ இப்படி எல்லாம் சொல்லியும், கைகேயி ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், பலவீனமான இடத்தைப் பார்த்து கடைசி அஸ்திரத்தை பிரயோகிக்கிறாள். அதை அழகான கம்பன் பாட்டால் காணலாம்.

“காதல் உன் பெருங் கணவனை அஞ்சி அக் கனிவாய்ச்
சீதை தந்தை உன் தாதையைத் தெறுகிலன்; இராமன்
மாதுலன் அவன்; நுந்தை வாழ்வு இனி உண்டோ?
பேதை உன் துணை யார் உளர்
பழிபடப் பிறந்தார்?’’

என்ன பொருள் தெரியுமா?

மந்தரை சொல்கிறாள்:

‘‘இதோ பார் உன்னுடைய தந்தையின் நாடு மிதிலைக்குப் பக்கத்தில் உள்ளது. சீதையின் தந்தையாகிய சனக மன்னன், உன் தந்தை நாட்டின் மேல் படையெடுத்து அழிக்காதிருப்பதற்குக் காரணம், உன் கணவனாகிய தயரதன் தடுப்பான் என்ற அச்சமே. இந்த நிலையில், தயரதன் இறந்தபின் பட்டத்தில் இருக்கப் போகிறவன் ராமன்; அந்த ராமனுடைய மாமனார் சனகன். பிற்காலத்தில் சனகன் உன் தந்தையின் கேகய நாட்டின் மேல் படை எடுத்தால், ராமன் தன் மாமனாகிய சனகனுக்குத்தானே துணை செய்வான்? அப்போது உன் தந்தையின் நிலை (கதி) என்ன? பக்கத்து பக்கத்து நாடுகளில் எல்லைத் தகராறு வருவது சகஜம். அப்படி உன்னுடைய தந்தையின் நாட்டுக்கும் ராமனுடைய மாமனார், அதாவது சீதையின் தந்தையின் நாட்டிற்கும் பகை நேருகின்ற பொழுது, ராமன் உன் தந்தையின் பக்கத்தில் நிற்பானா? மாமனார் பக்கத்தில் இருப்பானா? இரண்டாவதாக, உன் தந்தைக்கு ஏற்கனவே வேறு பகைகள் உண்டு. அவர்கள் பரதனுக்கு ஆட்சி இல்லை, ராமன்தான் சக்கரவர்த்தி என்பதைத் தெரிந்து கொண்டுவிட்டால், பகையை தீர்த்துக் கொள்ள உன் தந்தையின் நாட்டின் மீது படை எடுப்பார்கள். அப்பொழுது எந்த அதிகாரத்தின் அடிப்படையில் பரதன் அவர்களுக்கு உதவ முடியும்? உன்னுடைய தந்தை நாடோடியாகத் திரிய வேண்டியதுதான்.

ஏற்கனவே மதிப்பிழந்த உனக்கு உன் தந்தையின் அரச பதவியும் போய் விட்ட பிறகு, என்ன மதிப்பு இருக்கும்? உன் உறவினர்களும், உன் தந்தையும், உன் தந்தையின் நாடும், கெடுவதற்கு நீயே காரணம் ஆகிவிட்டாய் என்பதைத் தவிர நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? உன்னுடைய உறவினர்களோ, உன்னுடைய தந்தையோ, பொருள் இழந்த நிலையில், தங்களுடைய துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்று உன்னிடத்தில் வந்தால், கொடுப்பதற்கு என்ன இருக்கிறது உன்னிடத்திலே? இருப்பதெல்லாம் கோசலையின் செல்வம். இது தெரியாமல் இருக்கிறாயே. உன் மகன் பரதனுக்கு அரசு கிடைக்காத படி செய்வதற்கு நீயே காரணமாகி விட்டாய். பெற்ற பிள்ளைக்கு இப்படிப்பட்ட ஒரு அவல நிலையை ஒரு தாய் ஏற்படுத்துவாள் என்றால் உலகத்தில் உன்னைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. ராமன் சக்கரவர்த்தி. ஒரு சக்கரவர்த்தியின் ராஜ்ஜியம் என்பது அவனுக்கு பின்னால் அவனுடைய பிள்ளைகளுக்குத் தான் வருமே தவிர, அந்த சக்கரவர்த்தியின் சகோதரர்களுக்கு வராது.

அப்படியே சகோதரர்களுக்கு வரும் என்றாலும்கூட, ராமனோடு எப்போதும் இணைந்து இருக்கக்கூடிய லட்சுமணனுக்கும், லட்சுமணனுடைய பிள்ளைகளுக்கும்தான் கிடைக்குமே தவிர, உனக்கோ உன்னுடைய பிள்ளைகளுக்கோ உன்னுடைய பேரப்பிள்ளைகளுக்கோ கிடைப்பதற்கு வழியே இல்லை.’’எவ்வளவு சாதுரியமாக கைகேயிடம் மந்தரை விஷயத்தை எடுத்துரைக்கிறாள் என்பதை கவனிக்க வேண்டும். இதில் எந்தவிதமான உலகியல் அநியாயமும் இல்லை. சாதாரணப் பெண், இன்னொரு சாதாரணப் பெண்ணுக்கு, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அச்சத்திற்கான அத்தனை சூழ்நிலைகளையும் எடுத்துரைக்கிறாள் என்பதுதான் உண்மை. இதில் மந்தரையிடம் கோபப்படுவதற்கோ, கைகேயியிடம் கோபப் படுவதற்கோ எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. சாதாரணமான வாழ்க்கையில், சாதாரணமான பெண்களின் நிலையில்
வைத்துப் பார்த்தால், இதிலே உள்ள உளவியல் உண்மைகள் புரியும்.
அடுத்த இதழில்…

தேஜஸ்வி

The post பிறந்த வீட்டையும் புகுந்த வீட்டையும் எந்த சூழலில் பெண்கள் விட்டுத் தருவதில்லை? appeared first on Dinakaran.

Related Stories: