பாவூர்சத்திரம் அரசு ஆண்கள் பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அரசு ஆண்கள் பள்ளி கடந்த 1966-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1969ம் ஆண்டு அப்போதைய கல்வித்துறை அமைச்சர் மாதவனால் திறக்கப்பட்டது. இப்பள்ளி கட்டிடத்திற்கு தேவையான இடத்தை தானமாக வழங்கிய முக்கூடல் ஊரைச்சேர்ந்த தொழிலதிபர் த.பி.சொக்கலால் பெயரில் இப்பள்ளிக்கட்டிடம் திறக்கப்பட்டது. பல்வேறு துறை உயர் அதிகாரிகளை உருவாக்கிய இப்பள்ளியின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது. இங்குள்ள கட்டிடங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. மேஜை நாற்காலிகள் பழுதடைந்து ஒரு அறையில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விளையாட்டு ஆர்வலர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் கபடி, சிலம்பம், கிரிக்கெட் மற்றும் காவலர் பயிற்சிக்காக இப்பள்ளி விளையாட்டு மைதானத்தை பயன்படுத்துவர். இரவு நேரங்களில் மது பிரியர்கள் ஆங்காங்கே செல்போன் ஒளி வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு மது பாட்டில்கள், ஸ்னாக்ஸ், கூல்ட்ரிங்ஸ் சகிதமா மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதனால் பள்ளி மைதானத்தில் காலி மது பாட்டில்கள், தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் பாக்கெட்டுகள் ஆங்காங்கே சிதறி கிடக்கும் அவல நிலை உள்ளது. மேலும் நெல்லை-தென்காசி நெடுச்சாலையில் 4 வழி சாலை பணிக்காக இப்பள்ளியின் சுற்றுச்சுவர் அகற்றப்பட்டது. அதற்கான இழப்பீட்டு தொகை சுமார் ரூ.1 கோடியே 13 லட்சம் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணம் தற்போது எங்கே உள்ளது என்கிற கேள்வி எழுந்துள்ளது. தரமற்ற பள்ளிக்கட்டிடத்தினால் ஏற்பட்ட அச்சத்தினால் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் என பலர் பள்ளியை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் கல்வித்துறை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் கல்விக்கண் திறப்பதற்கு கல்வித்துறை அதிகாரிகளும் முன் வர வேண்டும் என ம.தி.மு.க, தெற்கு மாவட்ட செயலாளர் ராம உதயசூரியன், முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி ஆரம்பிக்கும் போது கட்டிய கட்டிடம் பழுதடைந்தால் புதிய கட்டிடம் தென்காசி – நெல்லை தேசிய நெடுஞ்சாலை அருகே பள்ளி வளாகத்தின் வடக்குபுறம் கடந்த 2008ம் ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் 83.52 லட்சம் செலவில் சுமார் 20 பள்ளி வகுப்பறைகள், 1 ஆய்வுக்கூடம், 4 கழிவறைகள் கட்டப்பட்டது. இக்கட்டிடம் கடந்த 2008ம் ஆண்டு திறக்கப்பட்டது.
அந்த கட்டிடமும் பராமரிப்பின்றி, வர்ணம் பூசாமல் பொழிவிழந்து காணப்படுகிறது. அந்த கட்டிடத்தில் தான் தற்போது மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

அந்த கட்டிடத்தையும் வர்ணம் பூசி, சிறிதளவு சேதமடைந்த பகுதிகளை சரி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், ‘இப்பள்ளிக்கு தலைமையாசிரியராக வருபவர்கள் அப்பணி நிறைவு பெற ஒரு வருடம் மட்டுமே இருக்கும் நிலையில் வருகின்றனர். இதனால் பள்ளியின் முன்னேற்றம் குறித்து அதிக சிரத்தை எடுத்து கொள்ள முடிவதில்லை. ஆகவே குறைந்தது இப்பள்ளிக்கு வரும் தலைமையாசிரியர்கள் 5 முதல் 6 வருடம் பணிபுரியும் வகையில் நியமிக்க வேண்டும்’ என்றனர்.

சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கிட்டத்தட்ட சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பள்ளிக்கட்டிடம் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. மீதமுள்ள 13 ஏக்கர் பராமரிப்பின்றி புதர் மண்டி, முட்கள் வளர்ந்து காணப்படுகிறது. முட்கள் வளர்ந்துள்ள பகுதியில் தான் மாணவர்கள் கழிவறைகள் உள்ளன. மாணவர்கள் நலன் கருதி முட்கள் மற்றும் புதர் மண்டி கிடக்கும் செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். இரவு நேரங்களில் மது பிரியர்களின் கூடாரமாக பள்ளி மைதானம் மாறுவதை தடுக்க சுற்றுச்சுவர் கட்ட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post பாவூர்சத்திரம் அரசு ஆண்கள் பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: