முதலில் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் தெரிய வராத விவரங்கள் மேல் விசாரணையில் தெரியவந்தால் அப்பாவிகள் தண்டிக்கப்படுவது தவிர்க்கப்படும்

* அமைச்சர்கள் விடுவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை வாதம்

சென்னை: முதலில் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் தெரியவராத விவரங்கள், பின்னர் தெரிய வரும்போது அதுகுறித்து மேல் விசாரணை நடத்தலாம். இதன்மூலம் அப்பாவிகள் தண்டிக்கப்படுவது தவிர்க்கப்படும். உண்மை குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்று முந்நாள், இன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்குகளில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய மேல் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், `மேல் விசாரணை நடத்த அனுமதி வழங்குவது மாஜிஸ்திரேட்டின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. முதலில் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் தெரியவராத விவரங்கள் பின்னர் தெரிய வரும்போது, அதுகுறித்து மேல் விசாரணை நடத்தலாம்.

இதன்மூலம் அப்பாவிகள் தண்டிக்கப்படுவது தவிர்க்கப்படும். உண்மை குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. மேல் விசாரணை அறிக்கையை ஏற்பதா அல்லது மறுப்பதா என்பதையும், அந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிப்பது அல்லது குற்றச்சாட்டுகளை பதிவு செய்து சாட்சி விசாரணையை துவங்குவது குறித்தும் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும்’ என்று வாதிட்டு தனது வாதத்தை முடித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இந்த வழக்குகளில் விடுவிக்கக் கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது முந்தைய ஆட்சிக் காலத்தில் காவல்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்க விரும்பவில்லை. அதனால், அந்த மனுக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன. அதனால் இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “ஆட்சி மாற்றம் காரணமாக காவல் துறையினர் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவது துரதிருஷ்டவசமானது. இது அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மட்டுமே நடக்கிறது. வேறு நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நடப்பதில்லை.

முந்நாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டது சரி என்று முடிவுக்கு வந்து, தானாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட இந்த வழக்குகளை ஒரு வேளை முடித்து வைத்தாலும்கூட, இந்த வழக்குகளின் விசாரணையின் போது நடைபெற்ற முறைகேடுகள் குறித்து எவரேனும், எப்போதாவது கேள்வி எழுப்புவர் என்ற செய்தியை சொல்லவே இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அட்வகேட் ஜெனரலின் வாதங்களுக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பதில் வாதங்களை வைப்பதற்காக விசாரணை நாளைக்கு தள்ளி வைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.

The post முதலில் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் தெரிய வராத விவரங்கள் மேல் விசாரணையில் தெரியவந்தால் அப்பாவிகள் தண்டிக்கப்படுவது தவிர்க்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: