சிவ வடிவங்களில் மான்

காட்டில் வாழ்வதும் கூட்டமாகத் திரிவதும் அச்சம் மிகுந்ததும், அலைபாயும் கண்களை உடையதும் பாய்ந்து துள்ளியோடுவதும் ஆகிய குணங்களைக் கொண்ட விலங்குகள் மான்கள் ஆகும். மான்குட்டிகளை எடுத்து வந்து வீட்டிலும் வளர்க்கின்றனர். மான் தெய்வீக சக்தியுள்ள விலங்காகப் போற்றப்படுகின்றது. மானின் மூச்சுக்காற்று பரவியுள்ள இடங்களில் வேதம் செழிப்பாக இருந்து ஓதுபவர்க்கும் கேட்பவர்க்கும் நல்ல பலன்களைத் தரும் என்பது நெடுநாளையை நம்பிக்கையாகும். அதனால் முனிவர்கள் தம்பர்ணக சாலையில் மான்களை வளர்த்தனர். மான்கள் அங்கு சுற்றித்திரிந்து துள்ளி விளையாடி மகிழ்ந்தன.

சிவபெருமான் வேதங்களைத் தோற்றுவித்தவன். அதை மற்றவர்க்கு போதிப்பவன். வேதஞானத்தை எங்கும் பெருகச்செய்பவன், அவன் வேதம் ஓதுவதையும் ஓதுவிப்பதையும் குறிக்க மான் ஏந்துகிறான் என்பர். ‘‘வேதம் மான் மறியே’’ என்கிறது தேவாரம். சிவபெருமானின் மகேசுவர வடிங்களில் மானோடு இருக்கும் வடிவங்கள் பலவாகும். சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், கங்காவிசர்ச்சனர், உமாமகேசர் முதலான வடிவங்களில் அவரது மேல்கரத்தில் தாவித் துள்ளிக்குதிக்கும் மான் இருப்பதைக் காணலாம். பிட்சாடனர் வடிவில் பெரிய மான் ஒன்று அவரைத் தொடர்வதையும் அவர், அதற்கு புல்லைத் தரும் கோலத்தில் இருப்பதையும் காண்கிறோம். கங்காளர் வடிவிலும் மான் அவரைத் தொடர்கிறது.

சிவபெருமான் மானை ஏந்துவதால் மானேந்தியப்பர் என்று அழைக்கப்படுகிறார். கல்லிடைக்குறிச்சி எனும் தலத்தில் உள்ள சிவபெருமானுக்கு மானேந்தியப்பர் என்பது பெயர்.
சில தட்சணாமூர்த்தி வடிவங்களில் அவருடைய பீடத்தில் மான்கள் படுத்துக் கொண்டிருப்பதையும் காணலாம். அம்பிகை வடிவங்களில் அவள் மானுடன் இருக்கக் காண்கிறோம். மானைத் தழுவி நிற்கும் அன்னை பராசக்தி மானேந்து வல்லி எனப்படுகிறாள். அவள் துர்க்கை வடிவில் இருக்கும் போது முறுக்கிய கிளைவி்ட கொம்புகளை உடைய மானின் மீது அமர்ந்து வருகிறாள். மான்மீது வரும் அவளைப் ‘‘பாய்கலைப் பாவை’’ என்று அழைக்கின்றனர். தஞ்சைப் பெரிய கோயிலில் வெள்ளியாலான மான் வாகனம் உள்ளது.

நதிக்கரைகள் அனைத்திலுமே மான்கள் வசிக்கும் என்றாலும் தாமிரபரணி நதி தேவியோடு மட்டுமே மான் அவளைத் தொடர்ந்து வருவதாக அமைக்கப்படுகின்றது.
மான் வேதத்தின் அடையாளம் என்பதால் ஆசிரமங்களில் மான் இறந்தால் அவற்றின் தோலைப் பயன்படுத்தி ஆசனமாகப் பயன்படுத்தினர். முனிவர்களின் குழந்தைகளை மான்தோலில் இட்டு வளர்த்தனர்.

மான் தோலானது ஆடைகளாகவும் பயன்படுத்தப்பட்டது, வேடர்கள் மான் தோலை பயன்படுத்தினர். முருகனின் தேவியான வள்ளியம்மை மானுடன் காட்சி தருகிறாள். அவள் மான் வடிவில் இருந்த மகாலட்சுமியின் வயிற்றில் இருந்து பிறந்தாள் அதனால் மான்மகள் என்றும் ‘‘மான் பயந்த மடப்பாவை’’ என்றும் அழைக்கப்படுகின்றாள். வள்ளி ஆலயங்களில் கோபுரம் விமானம் மதில் களில் மானில் வடிவத்தை மட்டுமின்றி வழக்கம்.

மகாலட்சுமி மட்டுமின்றி அரம்பை, திலோத்தமை போன்றவர்களும் மான் வடிவில் திரிந்ததைப் புராணங்கள் கூறுகின்றன. அஷ்டதிக்குப் பாலகர்களில் வாயு தேவன் மான் வாகனத்தில் பவனி வருகிறார். சமணசமய மகா குருமார்களும் கடவுளருமான தீர்த்தங்கரர்கள் 24 நான்கு பேர்களில் பதினாறாவதான சாந்திநாதர் என்னும் தீர்த்தங்கரரின் இலச்சினை மான் ஆகும். தென்னாட்டில் அவரது பீடத்தில் ஒருமானும் வடநாட்டு சிற்பங்களில் பீடத்தில் நடுவில் தர்மச் சக்கரமும் அதன் இருபுறமும் மான்களும் இருக்கக் காணலாம்.

பௌத்தர்களும் மான்களைப் போற்றுகின்றனர். மான்கள் நிறைந்த காடுகளுக்கு நடுவே புத்தர் இருந்து உபதேசம் செய்து வந்துள்ளார். புத்தர் தம் உபதேசத்தை தொடங்கிய இடம் மான்களின் காடு எனும் பெயரால் மாங்காடு என வழங்கியது.வடமொழியில் மானுக்குச் சாரங்கம் என்பது பெயர் அதையொட்டி இந்த இடம் சாரங்கநாத் எனப்பட்டது. மான் கூட்டத்திற்கு நடுவே குன்றின்மீது எழுந்தருளி இருக்கும் சிவபெருமான் சாரங்கநாதர் என்று அழைக்கப்படுகின்றார். மானுக்குப் புல்வாய் என்பது பெயர் தென் மாவட்டத்திலுள்ள ஒரு அம்பிகை புல்வாய் நாயகி என்று அழைக்கப்படுகிறாள். நட்சத்திரங்களில் மான் அனுஷ நட்சத்திற்கு உரிய விலங்காகக் கூறுகின்றனர். பறவை வானம்பாடியாகும்.

தொகுப்பு: நாகலட்சுமி

The post சிவ வடிவங்களில் மான் appeared first on Dinakaran.

Related Stories: