×

சாகுபடியில் 20% கூடுதல் மகசூல் ஈட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ‘கரும்பு பூஸ்டர்’ பயன்பாடு

 

திருச்சி, மே 31: கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் ஈட்ட கரும்பு பூஸ்டர் பயன்படுத்துவது நல்ல பலனை கொடுக்கும் என சிறுகமணி வேளாண் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 1.6 லட்சம் எக்டர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் சராசரியாக 176.58 லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்பு சாகுபடி செய்ய அதிக நீர் தேவைப்படும். இதனால் நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் அதன் மகசூல் குறைகிறது. அதோடு கரும்பில் மகசூல் இழப்புக்கு பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களும் ஒரு காரணமாகும். வறட்சி, நீர்த்தேக்கம் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களாலும் கரும்பில் மகசூல் இழப்பு ஏற்படும். எனவே கரும்பு சாகுபடியில் தேவையான ஊட்டச்சத்து மேலாண்மை வழிமுறைகளை பின்பற்றினால் கரும்பு சாகுபடியில் மகசூலை அதிகரிக்கலாம். இதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிர் வினையியல் துறை அறிமுகம் செய்திருக்கும் ‘கரும்பு பூஸ்டர்’ என்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பூஸ்டர் கலவை நல்ல பலனை தருகிறது.

இதை கரும்பு சாகுபடியில் பயன்படுத்தும் போது பயிரின் வறட்சியை தாங்கும் தன்மை அதிகரிப்பதுடன் விளைச்சலும் அதிகரிக்கிறது. கரும்பு பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை தரக்கூடிய ஒரு பூஸ்டர் கலவையே இந்த கரும்பு பூஸ்டர். இந்த பூஸ்டரை ஏக்கருக்கு 1 கிலோ, 1.5 கிலோ மற்றும் 2 கிலோ என்ற அளவில் கரும்பு நட்ட 45, 60 மற்றும் 70 ஆகிய நாட்களில் 200 லிட்டர் தண்ணீரில் முழுவதுமாக கலந்து தெளிக்க வேண்டும். இந்த பூஸ்டரை அளிப்பதால் இடைக்கணுக்களின் நீளம் கூடுகிறது. கரும்பின் வளர்ச்சி மற்றும் எடை அதிகரிக்கிறது. வறட்சியை தாங்கும் தன்மையும் அதிகரிக்கும். மேலும் சர்க்கரை கட்டுமானத்தையும் அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் கரும்பு சாகுபடியில் மொத்த மகசூல் சராசரியாக 20% வரை அதிகரிக்கும் என சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜா பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தின் 91717 17832/ 0431-2962854 என்ற எண்களில் அலுவலக வேலை நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சாகுபடியில் 20% கூடுதல் மகசூல் ஈட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ‘கரும்பு பூஸ்டர்’ பயன்பாடு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Sirugamani Agricultural Station ,Coordinator ,Raja Babu ,Tamil Nadu ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்