கோத்தகிரியில் கேர் அறக்கட்டளை சார்பில் உலக மாதவிடாய் விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஊட்டி, மே 30: கோத்தகிரியில் கேர் அறக்கட்டளை சார்பில் உலக மாதவிடாய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. உலக மாதவிடாய் விழிப்புணர்வு கருத்தரங்கு ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இறுதி வாரத்தை உலக மாதவிடாய் விழிப்புணர்வு வாரம் என அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு கோத்தகிரி அருகே உள்ள டானிங்டன் பகுதியில் இயங்கும் கேர் அறக்கட்டளை சார்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் மண்டல இயக்குனர் வினோபாப் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வுபெற்ற ஆசிரியர் கே.கே.ராஜு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது: உலகில் உள்ள பெரும்பான்மையான சமுதாயங்களில் பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் மாத விடாய் குறித்து பல மூட நம்பிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். மாதவிடாய் என்பது ஒரு பெண்ணை தாய்மைக்கு தயாராக்கும் இயற்கையின் ஒரு நிகழ்வாகும்.

இதுகுறித்து அறிவியல் பூர்வமான உண்மைகளை அறியாமல் மக்கள் தீட்டு என்று கருதி பெண்களை பல இன்னல்களுக்கு உட்படுத்துகின்றனர். சில வளர்ந்த சமுதாய மக்கள் கூட மாதவிடாய் காலத்தை தீட்டு என கருதி பெண்களை ஒதுக்கி வைக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு தனியான அறையில் தங்க வைக்கப்படுகின்றனர். ஆற்றில் குளித்த பின் தான் வீட்டுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த தொல்லையை தவிர்ப்பதற்காக பல குடும்பங்கள் நகரங்களுக்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இடம் பெயர்ந்து உள்ளனர். மேலும், பல பெண்கள் கருப்பையை தம் உடலில் இருந்து அகற்றி உள்ளனர் என்பது வருந்தத்தக்கது.

நமது உடலில் ஒரு உறுப்பு இல்லை எனில் இயற்கை பல வழிகளில் நம்மை சீரழிக்கும் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் சுமார் 300 கருமுட்டைகளை உருவாக்குகிறார்கள். இந்தக் கரு முட்டைகள் பத்திரமாக கருப்பையில் வைக்கப்படுவதற்கு முன்பு அதைச் சுற்றி ரத்த அணுக்களால் ஆன ஒரு பஞ்சு மெத்தை போன்ற அமைப்பு உருவாகிறது. அது கருமுட்டையை கருப்பையில் வைக்கிறது.  அந்த கருமுட்டையானது குறிப்பிட்ட ஒரு 14 நாட்களில் ஒரு ஆணின் விந்தணுக்களால் கருவூட்டப்படவில்லை எனில் அதனுடைய வாழ்நாள் முடிவடைகிறது. அதனை வெளியேற்றுவதற்காக இயற்கை அந்த கருப்பையை சுருங்க வைத்து அந்த ரத்த அணுக்களால் உருவாக்கப்பட்ட அந்த அமைப்பை கலைத்து வெளியேற்றுகிறது.

இதுவே மாதவிடாய் என அழைக்கப்படுகிறது. இந்த சமயத்தில் பெண்களுக்கு பல இயற்கையான இடர்பாடுகள் ஏற்படும். வயிற்று வலி, தசைப்பிடிப்பு போன்ற பல எதிர்வினைகளை அவர்கள் எதிர்கொள்வார்கள். அவற்றை குணப்படுத்த உரிய மருந்துகள் பயன்படுத்தலாம். மருத்துவரின் ஆலோசனையின் படி தேர்வு காலங்களில் ஏற்படும் மாதவிடாயை தள்ளி வைக்கலாம் அல்லது முன்னதாகவே எதிர்கொள்ளலாம். சாதாரண வலி மாத்திரை கூட மாதவிடாய் பிரச்னையை தீர்க்கும். திருநங்கைகளுக்கும் இயல்பான பெண்களைப் போன்ற மாதவிடாய் நிகழ்ச்சிகள் நடைபெறும். இவர்களுக்கு மேலும், பல சிக்கல்களை உருவாக்கும் என்ற மருத்துவர்கள் கூறுகிறார்கள். சீனாவில் மாதவிடாய் சமயத்தில் வெளியேற்றப்படும் ரத்தத்தை சேகரித்து தூய்மைப்படுத்தி மீண்டும் பயன்படுத்துகிறார்கள்.

மாதவிடாய் குறித்த அனைத்து அறிவியல் பூர்வமான உண்மைகளையும் பொதுமக்கள் தெரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, அறக்கட்டளையின் களப்பணியாளர் சுகுணா வரவேற்றார். களப்பணியாளர் புஷ்பராணி நன்றி கூறினார்.

The post கோத்தகிரியில் கேர் அறக்கட்டளை சார்பில் உலக மாதவிடாய் விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: