தமிழ்நாட்டில் இயல்பைவிட 5 நாட்களுக்கு 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்: ராஜஸ்தான், குஜராத்தில் 122 டிகிரி வரை வெயில்

சென்னை: தமிழ்நாட்டில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் 26ம் தேதி நிலை கொண்டு இருந்த ரெமல் புயல், வடக்கு திசையில் நகர்ந்து நள்ளிரவில் வங்க தேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரை அருகில் சாகர்தீவு-கேப்புப்பாராவுக்கும் இடையில் கரையைக் கடந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. வெப்பநிலையை பொருத்தவரையில் கோவை, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. சென்னையில் அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் நிலவியது.

பிற மாவட்டங்களில்வேலூர் 104 டிகிரி, தஞ்சாவூர் 102 டிகிரி, கடலூர், திருத்தணி, திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் 100 டிகிரி வெயில் நிலவியது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்சமாக 100- 102 டிகிரி வரை வெயில் நிலவியது. கடலோரப் பகுதிகளில் 97 டிகிரி வெயில் நிலவியது. தமிழக உள் மாவட்டங்களில் 99 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்குகளில் வட மேற்கு மற்றும் மேற்கு திசை காற்று நிலவுகிறது. அதன் காரணமாக இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் பொதுவாக இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையிலும் அதிகரித்து காணப்படும். இன்று ஒருசில இடங்களில் இயல்பைவிட அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளது. இதேநிலை 31ம் தேதி வரை நீடிக்கும்.

 

The post தமிழ்நாட்டில் இயல்பைவிட 5 நாட்களுக்கு 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்: ராஜஸ்தான், குஜராத்தில் 122 டிகிரி வரை வெயில் appeared first on Dinakaran.

Related Stories: