ஊட்டியில் பெய்த கன மழையால் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை துவங்கிய கனமழை இரவு முழுக்க கொட்டி தீர்த்ததால் குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை பகுதியில் சாலையில் மரம் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டியில் நேற்று காலை மரம் விழுந்து எட்டினஸ் சாலையில் போக்கவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவ மழை பெய்யும். அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கிய இரு மாதங்கள் வடக்கு கிழக்கு பருவமழை பெய்யும். இடைப்பட்ட காலங்களில் மழை குறைந்தே காணப்படும்.பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மழை இருக்காது.ஆனால், இம்முறை கடந்த பத்தாம் தேதி துவங்கிய மழை நீலகிரி மாவட்டத்தில் நாள்தோறும் பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி, குன்னூர் மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில்,நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை மழை பெய்யாமல் வானிலை சீராக இருந்தது. ஆனால், மாலை 5 மணிக்கு துவங்கிய மழை இரவு சுமார் 1 மணி வரை கொட்டி தீர்த்தது. குன்னூர் மற்றும் மஞ்சூர் போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த கன மழை காரணமாக குன்னூரில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் வண்டிச்சோலை அருகே சாலை ஓரத்தில் இருந்த மரம் குறுக்கே விழுந்தது.மேலும், அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் அவ்வழியாக சென்ற கார் ஒன்று சேற்றில் சிக்கிக் கொண்டது. அங்கு உடனடியாக சென்ற மாநில பேரிடர் மீட்பு குழுவினர், மரத்தை அகற்றி வாகனத்தை மீட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின் வழித்தடத்தில் போக்குவரத்து துவங்கியது. நேற்று காலை ஊட்டியில் பெய்த கன மழை காரணமாக ஊட்டி எட்டினஸ் சாலையில் குறுக்கே ஒரு மரம் விழுந்து.

இதனால், இவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதிக்கு சென்ற தீயணைப்புதுறையினர் மற்றும் காவல்துறையினர் அந்த மரத்தை அகற்றினர். இதனால், இவ்வழித்தடத்தில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுவாக ஜூன் மாதம் பெய்யும் பருவமழையின் போது தான் இது போன்று மண் சரிவு ஏற்படுவது மரங்கள் விழுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஆனால், கோடை காலமான மே மாதம் பெய்யும் மழையில் இது போன்று பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். நேற்று முன்தினம் நீலகிரியில் பெய்த மழையின் அளவு மி.மீ.,ல்: ஊட்டி 54,நடுவட்டம் 43,குந்தா 90, அவலாஞ்சி 63,எமரால்டு 55,கிண்ணக்கொரை 64,அப்பர்பவானி 48,கெத்தை 102,கூடலூர் 53,தேவாலா 52,கோடநாடு 111,நீலகிரி மாவட்டத்தில் நேற்று 1783.60 மிமீ., மழை பெய்துள்ளது. சராசரியாக 61.50 மீ.மீ., மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

The post ஊட்டியில் பெய்த கன மழையால் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: