சென்னை: பண்ணை வீட்டில் நுழைந்து தகராறில் ஈடுபட்டு, மின் இணைப்பு துண்டிக்க வந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் காவலாளியை தாக்கியதாக பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில், முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முன்னாள் டிஜிபியான ராஜேஷ் தாசின் பண்ணை வீடு கேளம்பாக்கம் அருகே தையூரில் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. நீச்சல் குளத்துடன் அமைந்துள்ள பண்ணை வீட்டில்தான் ராஜேஷ் தாஸ் எப்போதும் தங்குவது வழக்கம். இந்த வீடு மற்றும் நிலம் ஆகியவை ராஜேஷ் தாஸ் மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான பீலா வெங்கடேசன் பெயரில் வாங்கப்பட்டுள்ளது.
மேலும், 2 பேரின் பெயரில் வங்கிக்கடனும் பெறப்பட்டுள்ளது. இதனிடையே, ராஜேஷ் தாஸ் பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார். இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக தையூர் பண்ணை வீட்டிற்கு அவர் வரவில்லை. வீட்டில் நேபாளத்தை சேர்ந்த காவலாளி நர் பகதூர் மற்றும் தையூரை சேர்ந்த தோட்ட பராமரிப்பாளர் மேகலா ஆகியோர் மட்டும் பணியில் இருந்தனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பாலியல் வழக்கில் சரணடைவதில் இருந்து ராஜேஷ் தாஸ் விலக்கு பெற்றார். தொடர்ந்து, கடந்த 18ம்தேதி தையூர் பண்ணை வீட்டிற்கு வந்த ராஜேஷ் தாஸ் வீட்டிற்குள் நுழைய முயன்றதாக தெரிகிறது. அப்போது, பணியில் இருந்த காவலாளி நர் பகதூர் கேட்டை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு பீலா வெங்கடேசன், இந்த வீட்டில் யாரையும் விட வேண்டாம் என்று கூறி உள்ளதாக கூறினார். இதையடுத்து, செல்போன் மூலம் ஆட்களை வரவழைத்த ராஜேஷ் தாஸ், காவலாளியை அடித்து துரத்திவிட்டு அந்த வீட்டில் தங்கி உள்ளார்.
அவருக்கு பாதுகாப்பாக 10க்கும் மேற்பட்ட அடியாட்கள் வீட்டில் தங்கி உள்ளனர். வீட்டை சுத்தம் செய்யும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஆன்லைன் மூலம் பீலா வெங்கடேசன், மின்வாரிய நிர்வாகத்திடம் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது வீட்டை சில மாதங்களுக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், அதனால் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்குமாறும் கூறி இருந்தார். இதையடுத்து, கேளம்பாக்கம் மின் வாரிய ஊழியர்கள் தையூர் கிராமத்திற்கு சென்று மின் இணைப்பை துண்டிக்க முற்பட்டனர்.
அப்போது, ராஜேஷ்தாஸ் மற்றும் அவருடன் இருந்த நபர்கள் மின்வாரிய ஊழியர்களை தாக்க வந்தனர். இதனால், பயந்துபோன ஊழியர்கள் மின் கம்பத்தில் ஏறி மின் வயரை துண்டித்து விட்டு சென்று விட்டனர். இதனிடையே, நேற்று ஆன்லைன் மூலம் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றை அனுப்பினார். தனது முன்னாள் கணவர் ராஜேஷ் தாஸ் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர் தனக்கு சொந்தமான தையூர் வீட்டின் உள்ளே அத்து மீறி நுழைந்து காவலாளியை தாக்கி செல்போனை பறித்துவிட்டு உள்ளே தங்கி இருப்பதாகவும், அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து கேளம்பாக்கம் போலீசார், 5 பிரிவுகளின் கீழ் ராஜேஷ்தாஸ் மற்றும் 10 பேரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
The post பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரில் முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.