கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு வார இறுதி, விசேஷ நாட்களில் மட்டும் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் தற்பொழுது இயக்கப்பட்டு வருகிறது. மேற்படி தடங்களில் குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், இந்த கோரிக்கையின் அடிப்படையில் வரும் 23ம்தேதி (நாளை) முதல் திருவண்ணாமலைக்கு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அவற்றில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு வரும் 24ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டும் சோ தனை முறையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் மற்றும் ஆற்காடு, ஆரணி வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* இன்று பவுர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்
போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு இன்று (புதன்) சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 330 பேருந்துகள் தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். மேலும், பல்வேறு இடங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்கு 225 பேருந்துகள் தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 30 பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும்.

சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் www.tnstc.in < //www.tnstc.in > மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு வார இறுதி, விசேஷ நாட்களில் மட்டும் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: