சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல், வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

சென்னை: கேரள அரசு, சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல்துறை, தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டங்களில் வேளாண் பாசனத்திற்கும், பல லட்சம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் அமராவதி ஆற்றுப்படுகை விளங்குகிறது. அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அமராவதி அணையில் இருந்தும், ஆற்றில் இருந்தும் ஏராளமான பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

அமராவதி ஆற்றுக்கு பாம்பாறு, சிலந்தி ஆறு, தேவாறு, சின்னாறு ஆகிய துணை ஆறுகள் உள்ளன. இதனையடுத்து இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணை நடத்தினர்.

அப்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர்கள் பேசியதாவது: சிலந்தி ஆற்றின் குறுக்ேக கேரள அரசு அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல்துறை, தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? அனுமதி பெறவில்லை என்றால் அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் அணை கட்டுவதால் தமிழக அரசுக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

The post சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல், வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: