காதல் கணவரின் குடும்பத்தினர் அவமானப்படுத்துவதாக தாலியை கழட்டி சாலையில் வீசி இளம்பெண் தர்ணா

*மகளிர் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் அருகே ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மீனா(30). இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த திருப்பதி கடந்த ஒரு மாதத்துக்கு முன் நடந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். இதனால் அவர் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே மீனா தனது கணவரின் குடும்பத்தினர் தன்னை அவமானப்படுத்துவதாகவும், மேலும் தன்னை வீட்டில் இருக்கக்கூடாது என அவரது சகோதரர் நந்தகுமார் மிரட்டுவதாகவும் கூறி நேற்று திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு இரு மகள்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் மீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர் தனது கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தான் போராட்டத்தை கைவிடமாட்டேன் எனக்கூறி தனது கழுத்தில் இருந்த தாலியை கழற்றி சாலையில் வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மீனாவை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்று மீனா போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் திருப்பதியின் குடும்பத்தினரை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதல் கணவரின் குடும்பத்தினர் அவமானப்படுத்துவதாக தாலியை கழட்டி சாலையில் வீசி இளம்பெண் தர்ணா appeared first on Dinakaran.

Related Stories: