சிவகாசி அருகே பயங்கரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலி: 9 பெண்கள் உள்பட 12 பேர் படுகாயம்

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 9 பெண்கள் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்த சரவணன் (57) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் லைசென்ஸ் பெற்ற ஆலையில் 30க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. நேற்று மதியம் வழக்கம்போல் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் அறையில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அந்த அறையில் இருந்து வெடித்து சிதறிய பட்டாசுகள், அடுத்தடுத்த அறைகளில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்து பயங்கரமாக வெடித்தது.

இதில் 7 அறைகள் தரைமட்டமாகின. 3 அறைகள் சேதமடைந்தன. விபத்தில் முதலிபட்டியை சேர்ந்த விஜயகுமார்(28),மத்திய சேனையை சேர்ந்த ரமேஷ்(31), வி.சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த காளீஸ்வரன் (47), ஆனையூர் காந்திநகரை சேர்ந்த மச்சக்காளை மனைவி முத்து(52), மாயாண்டி மனைவி ஆவுடையம்மாள்(65), வேலுச்சாமி மனைவி லட்சுமி (47), சிவகாசி கோபுரம் காலனியை சேர்ந்த சக்திவேல் மனைவி வசந்தி(48), மத்திய சேனை சக்திவீரன் மனைவி வீரலட்சுமி(48), சிவகாசி ரிசர்வ்லைன் இந்திராநகரை சேர்ந்த கண்ணன் மனைவி ஜெயலட்சுமி(25), மத்திய சேனை பகுதியை சேர்ந்த அழகர்சாமி (35)ஆகிய 10 பேர் உடல் கருகியும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த விருதுநகர் மாவட்டம், ஆலமரத்துப்பட்டி லட்சுமணன் மனைவி சுப்புலட்சுமி(70), ரிசர்வ்லைன் நேருஜி நகர் மகேஸ்வரன் மனைவி மல்லிகா(35), ஆனையூர் பாறைப்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி மனைவி நாகஜோதி(35), காந்திநகர் மூக்கன் மகன் திருப்பதி (47), ரிசர்வ்லைன் இந்திராநகரை சேர்ந்த மகாலிங்கம் மகன் கண்ணன் (30), சித்திவிநாயகம் மனைவி மாரியம்மாள் (50), மத்திய சேனையை சேர்ந்த பெருமாள் மகன் அழகுராஜா (29), செல்வம் மனைவி இந்திரா (48), முருகன் மனைவி ரெங்கம்மாள் (40), அழகுராஜா மனைவி அம்சவள்ளி (32), திருத்தங்கல் ரங்கசாமி மனைவி ஜெயந்தி (42), அய்யம்பட்டி சுரேஷ் மனைவி செல்வி (39) ஆகிய 12 பேர் பலத்த காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர தீக்காய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை டிஐஜி ரம்யாபாரதி, ஆர்டிஓ விஸ்வநாதன், தாசில்தார் வடிவேல், பட்டாசு தனி தாசில்தார் திருப்பதி, ஏடிஎஸ்பி சூரியமூர்த்தி, டிஎஸ்பிக்கள் சுப்பையா, முகேஷ், ஜெயக்குமார், பவித்ரா உள்ளிட்டோர் பார்வையிட்டனர். விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் ஆலை உரிமையாளர் திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்த சரவணன்(57) உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* 5 மாதத்தில் 27 பேர் சாவு
கடந்த 5 மாதங்களில் விருதுநகர் மாவட்டத்தில் 11 பட்டாசு வெடி விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில் 27 பேர் பலியாகி உள்ளனர். 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தேதி இடம் பலி காயம்
ஜன.6 வெள்ளூர் – 2
ஜன.24 ஆர்.ஆர்.நகர் 4 –
ஜன.25 சாத்தூர் 1 –
ஜன.25 பாவாலி – 1
ஜன.27 வெள்ளூர் 1 –
பிப்.17 முத்துசாமிபுரம் 11 6
பிப்.18 ஓ.கோவில்பட்டி – –
பிப்.24 சிந்தப்பள்ளி 1 –
மே 6 செங்கமலபட்டி – 5
மே 6 ஈஞ்சார் – –
மே 9 செங்கமலபட்டி 9 12

* ஆலைக்கு வெளியே வீசப்பட்ட உடல்
வெடி விபத்தில் பலியான ரமேஷ் என்ற தொழிலாளியின் உடல் பட்டாசு ஆலைக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு ஓடைக்குள் கிடந்தது.

* விதிமீறும் ஆலை உரிமையாளர்கள் மீது குண்டாஸ்: எஸ்பி எச்சரிக்கை
வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா பார்வையிட்டனர். பின்னர் எஸ்பி கூறுகையில், ‘‘வெடிவிபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையில் பணி புரிந்தவர்களுக்கு முறையாக பயிற்சி கொடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றோம். பட்டாசு ஆலை குத்தகைக்கு விடப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவரும் பட்சத்தில் ஆலை உரிமையாளர், குத்தகைக்கு எடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து விதிகளை மீறி செயல்படும் ஆலையின் உரிமையாளர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

* 10 கி.மீ தூரம் அதிர்வு
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி சத்தத்தின் அதிர்வு சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உணர முடிந்தது. பயங்கர வெடி சத்தம் கேட்டவுடன் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தனர்.

* 4 நாட்களில் 3 விபத்து
சிவகாசியில் கடந்த 4 நாட்களில் 3 விபத்துகள் நடந்துள்ளன. சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கடந்த 6ம் தேதி பட்டாசு மூலப்பொருள் தயாரிக்கும் கம்பெனியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அதே நாளன்று ஈஞ்சாரில் கலர் மத்தாப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆலையின் ஒரு அறை சேதமடைந்தது. நேற்று செங்கமலப்பட்டியில் வெடி விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

* தொழிற்சாலையில் தீ பட்டாசு வெடித்து 3 பேர் படுகாயம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் ராஜேந்திரன் (47). இவருக்கு சொந்தமான நாட்டு பட்டாசுகள், வான வெடிகள், மத்தாப்பு உள்ளிட்டவை தயாரிக்கும் தொழிற்சாலை அப்பகுதியில் உள்ளது. நேற்று வழக்கம்போல் தொழிற்சாலையில் உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் 4 பெண்கள் உள்பட மொத்தம் 5 பேர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மதியம் 1 மணியளவில் எதிர்பாராதவிதமாக பட்டாசு தயாரிக்கும் வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது. தகவல் அறிந்த மரக்காணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது தொழிற்சாலையின் உரிமையாளர் ராஜேந்திரன் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கொழுவாரி கிராமத்தைச் சேர்ந்த கௌரி(45), ஆண்டாள் (37) ஆகிய 3 பேரும் பலத்த தீக்காயங்களுடன் மயங்கி கிடந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் பேட்டி
வெடி விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்டஈடு 2 நாட்களில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பட்டாசு ஆலைகளில் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் பேராசையின் காரணமாகவே விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதை தடுக்க ஜூன் 4ம் தேதிக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும். பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.

The post சிவகாசி அருகே பயங்கரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலி: 9 பெண்கள் உள்பட 12 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: