பெண் ஊழியருக்கு ஆளுநர் பாலியல் துன்புறுத்தல் ராஜ்பவன் வந்த பிரதமர் மோடி ஏன் வாய் திறக்கவில்லை? முதல்வர் மம்தா கேள்வி?

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளுநர் மாளிகைக்கு வந்த பிரதமர் மோடி ஏன் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி இருக்கிறார். மேற்கு வங்க மாநிலத்தில் ராஜ்பவனில் வேலை செய்து வந்த பெண் ஊழியரிடம் ஆளுநர் ஆனந்தபோஸ் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மக்களவை தேர்தல் நேரத்தில் எழுந்துள்ள ஆளுநர் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டு மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் புர்பா பர்தமான் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி,‘‘ராஜ்பவனில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணுக்காக என் இதயம் ரத்தம் சிந்துகிறது. இது மிகுந்த அவமானம். ராஜ்பவனில் வேலை செய்த பெண், ஆளுநரின் துன்புறுத்தலுக்கு எதிராக வெளியே வந்து பேசினார். அந்த பெண்ணின் கண்ணீர் என் இதயத்தை உடைத்தது. அவரது வீடியோ சாட்சியை பார்த்தேன். சந்தேஷ்காலி குறித்து பேசுவதற்கு முன் பாஜவானது ராஜ்பவனில் பணிபுரியும் பெண்ணிடம் ஆளுநர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார்? என கூற வேண்டும். நேற்று முன்தினம் ராஜ்பவனுக்கு வந்த பிரதமர் மோடி இந்த விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.

* அபத்தமான நாடகம்
மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்துள்ள நிலையில் இது குறித்து ராஜ்பவனில் இருந்து பதிவு செய்யப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேசியுள்ள ஆளுநர் ஆனந்த போஸ்,‘‘சில அரசியல் சக்திகளால் என் மீது அடிக்கடி சுமத்தப்படும் அனைத்து தாராளமான குற்றச்சாட்டுக்களையும், அவதூறுகளையும் நான் வரவேற்கிறேன். இது அபத்தமான நாடகம். எனக்கு புரிகிறது நண்பர்களே, இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் ஒன்று தெளிவாக தெரிகிறது. ஊழலை அம்பலப்படுத்தவும், வன்முறையை கட்டுப்படுத்தவதற்கும் நான் எடுக்கும் உறுதியான முயற்சிகளில் இருந்து அபத்தமான நாடகங்கள் எதுவும் என்னை தடுக்கப்போவதில்லை. நற்பெயரை கெடுப்பது என்பது தோல்வியுற்ற தீமையின் கடைசி வழி. ராஜ்பவனில் இன்னும் மோசமான சதி தீட்டப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பெண் ஊழியருக்கு ஆளுநர் பாலியல் துன்புறுத்தல் ராஜ்பவன் வந்த பிரதமர் மோடி ஏன் வாய் திறக்கவில்லை? முதல்வர் மம்தா கேள்வி? appeared first on Dinakaran.

Related Stories: