தேர்தல் அறிக்கை வெளியிட மறுப்பு; தெலுங்கு தேசம்-பாஜ கூட்டணியில் திடீர் விரிசல்: ஆந்திரா தேர்தலில் பரபரப்பு


திருமலை: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தயாரித்த தேர்தல் அறிக்கை வெளியிட பாஜ மறுத்துள்ளதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் வரும் 13ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக மற்றும் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில் குண்டூர் மாவட்டம் உண்டவல்லியில் உள்ள தனது வீட்டில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு தேர்தல் அறிக்கையை நேற்றுமுன்தினம் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாண், பாஜக ஆந்திர தேர்தல் இணை பொறுப்பாளர் சித்தார்த்நாத்சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

சந்திரபாபு வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் ஆந்திராவில் 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு 2.20 லட்சம் வேலை வாய்ப்பு வழங்கப்படும். அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படும் ஏழைகளுக்கு தரமான வீடு, திருமண பரிசு தொகை ரூ1 லட்சம் வழங்கப்படும். இஸ்லாமியர்களுக்கு புனித மெக்கா பயணம் செய்யவும், கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் ெசல்லவும் அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும். மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்பது உள்பட பல்வேறு வாக்குதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட மாநில பாஜக தலைவரும், தனது மைத்துனியுமான புரந்தேஸ்வரிக்கு சந்திரபாபு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அவர் இதனை கடைசி நேரத்தில் புறக்கணித்தார். அவருக்கு பதிலாக பாஜ ஆந்திர தேர்தல் இணை பொறுப்பாளர் சித்தார்த் நாத் சிங் பங்கேற்றார்.

ஆனால் தேர்தல் அறிக்கையை பாஜ நிர்வாகி சித்தார்த்நாத்சிங்கிடம் சந்திரபாபு வழங்க முயன்றார். அவர் அதனை பெற மறுத்தார். இதனால் சந்திரபாபு மற்றும் பவன்கல்யாண் ஆகிய இருவர் மட்டுமே மேடையில் தேர்தல் அறிக்கையை நிருபர்கள் முன்னிலையில் வெளியிட்டனர். மேடையில் நிருபர்கள் மற்றும் 3 கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசியல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘சந்திரபாபு தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்களுக்கு மெக்கா செல்லவும், கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் ெசல்லவும் நிதியுதவி என குறிப்பிட்டபட்டுள்ளது. இதனை முன்கூட்டியே அறிந்துகொண்ட பாஜ மாநில தலைவர் புரந்தேஸ்வரி நிகழ்ச்சியை புறக்கணித்தார். சம்பிரதாயத்திற்காக மற்றொரு நிர்வாகியை அனுப்பி வைத்தார்.

ஆனால் அவரும் தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் அனைவரின் முன்னிலையில் மறுத்து ஒதுங்கிக்கொண்டார். சிறுபான்மையினருக்கு சலுகை வழங்குவதை பாஜ விரும்பாதது இந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக தெரிகிறது’ என்றனர். இதற்கிடையே தேர்தல் அறிக்கையின் முகப்பில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெறாதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மக்களை ஏமாற்ற சந்திரபாபு திட்டம் – முதல்வர் ஜெகன்மோகன் கருத்து
சந்திரபாபு தேர்தல் அறிக்கை ெதாடர்பாக அன்னமய்யா மாவட்டம் பீலேரில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் பேசுகையில், ‘கடந்த 2014ம் ஆண்டு இதே கூட்டணி இணைந்து தேர்தலில் போட்டியிட்டது. அப்போது இவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஒன்றைக்கூட முதல்வரான பிறகு சந்திரபாபு நிறைவேற்றவில்லை. அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை அவர்களது கட்சியின் இணையதளத்தில் இருந்து அவர்களாகவே நீக்கிக்கொண்டனர். ஆட்சிக்கு வருவதற்காக மீண்டும் பழைய பொய்களை சந்திரபாபு தேர்தல் அறிக்கையாக தயாரித்து வெளியிட்டுள்ளார்.

இதனை அவர் ஆட்சிக்கு வந்தாலும் நிறைவேற்ற முடியாது. அதனை சந்திரபாபுவும் உணர்ந்திருப்பார். மக்களை ஏமாற்றுவதற்காக மீண்டும் திட்டமிடுகிறார். ஆட்சிக்கு வருவதற்காக வீடு தோறும் 1 கிலோ தங்கம், 1 பென்ஸ் கார் தருகிறோம் என சந்திரபாபு வாக்குறுதி அளித்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

The post தேர்தல் அறிக்கை வெளியிட மறுப்பு; தெலுங்கு தேசம்-பாஜ கூட்டணியில் திடீர் விரிசல்: ஆந்திரா தேர்தலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: