இவிஎம்மில் என் போட்டோ சிறிதாக உள்ளது: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் புகார்


ராஜ்நந்த்கான்: வாக்குப் பதிவு இயந்திரத்தில் தன் புகைப்படம் சிறிய அளவில், தௌிவற்று இருப்பதாக சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் புகார் தெரிவித்துள்ளார். சட்டீஸ்கரின் கலாச்சார நகரம் என்று அழைக்கப்படும் ராஜ்நந்த்கான் தொகுதியில் இடைத்தேர்தலுடன் சேர்த்து காங்கிரஸ் கட்சி 8 முறையும், பாஜ 7 முறையும், ஜனதா கட்சி ஒரு முறையும் வெற்றி கண்டுள்ளது. 2000ம் ஆண்டு சட்டீஸ்கர் மாநிலம் தனியாக பிரிக்கப்பட்ட பிறகு அங்கு பாஜவின் கையே ஓங்கி உள்ளது. தற்போது பாஜ வேட்பளராக சந்தோஷ் பாண்டே மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலை காங்கிரஸ் களமிறக்கி உள்ளது.

18வது மக்களவைக்கான 2ம் கட்ட தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதில் சட்டீஸ்கரின் ராஜ்நந்த்கான், கான்கர் மற்றும் மகாசமுந்த் ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பூபேஷ் பாகேலின் புகைப்படம் மட்டும் சிறிய அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பூபேஷ் பாகேல் தன் ட்விட்டர் பதிவில், “தேர்தல் ஆணையம் கேட்டவாறு என் புகைப்படம் தரப்பட்டது. ஆனால் வாக்குப் பதிவு இயந்திரத்தில் மற்ற வேட்பாளர்களின் புகைப்படங்கள் பெரிதாகவும், தெளிவாகவும் உள்ளது.

அதனுடன் ஒப்பிடும்போது என் புகைப்படம் மட்டும் அளவில் சிறியதாக, தௌிவின்றி இருப்பதாக வாக்காளர்கள் கூறினர். இது எதிர்க்கட்சியின் சதியால் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் இதனால் முடிவுகள் மாற போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

குண்டர்களை வைத்து பாஜ மிரட்டுகிறது
பூபேஷ் பாகேல் மற்றொரு ட்விட்டர் பதிவில், “ராஜ்நந்த் கான் தொகுதியில் தெதேசரா கிராமத்தில் வேட்பாளரான என்னையே வாக்குச் சாவடிக்குள் நுழைய விடாமல் பாஜவினர் என்னை தடுத்தனர். தேர்தலில் பாஜவுக்கு எதிரான மக்களின் மனநிலையை உணர்ந்த பாஜ குண்டர்களை வைத்து வாக்காளர்களை மிரட்டுகிறது” என்று குற்றம்சாட்டி உள்ளார்.

The post இவிஎம்மில் என் போட்டோ சிறிதாக உள்ளது: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் புகார் appeared first on Dinakaran.

Related Stories: