தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு..!!

டெல்லி: பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் பத்திரத் திட்டம், அரசமைப்பு சாசனத்துக்கு விரோதமானது; அது அனாமதயமாக உள்ளதாக தெரிவித்து அந்த திட்டத்தை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்தது. அத்துடன் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு உத்தரவிட்டு, அந்த தரவுகளை பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் அதன் இணையத்தளத்தில் பதிவேற்றியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், எவ்வளவு தேர்தல் பத்திரத்தின் மூலம் நன்கொடை பெற்றது தெளிவானது. இந்நிலையில், தேர்தல் பத்திர முறைகேடு பற்றி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுநல வழக்குகள் மையம் மற்றும் பொதுநலன் ஆகிய அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் பத்திர திட்டம் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரும் அரசியல் கட்சிகள் பலன் அடைந்ததாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஈ.டி., ஐ.டி. விசாரணையில் சிக்கிய பல நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்துள்ளதால் விரிவான விசாரணை தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கிய விசாரணை அமைப்புகளான சிபிஐ, ஈ.டி., ஐ.டி., ஆகியவை ஊழலுக்கு துணை போயிருப்பதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்த பொதுநல மனுவை விரைந்து விசாரிக்க கோரி முறையிட உள்ளதாகவும், இந்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் விரைவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு..!! appeared first on Dinakaran.

Related Stories: