கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் மாமல்லபுரம் தலசயனபெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம்

மாமல்லபுரம்: கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் மாமல்லபுரம் தலசயனபெருமாள் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. மாமல்லபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற தலசயனபெருமாள் கோயிலில் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பிரமோற்சவ விழா துவங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் துவஜா ரோகணம், கேடயம்புறப்பாடு, யாளி வாகனம், அனுமந்த வாகனம், சேஷவாகனம், பல்லக்கில் நாச்சியார் திருக்கோலம், கருடசேவை, யானை வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் தேவி-பூதேவி சமேதராக தலசயன பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சித்திரை பிரமோற்சவ விழாவின் 7ம் நாளான இன்று காலை அலங்கரிக்கப்பட்ட தேவி-பூதேவி சமேதராக தலசயன பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதையடுத்து தென் மாடவீதி, மேற்கு ராஜவீதி, திருக்கழுக்குன்றம் சாலை, கிழக்கு ராஜவீதி வழியாக தேர்பவனி வந்து, மதியம் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர்.

உத்திரமேரூர்
உத்திரமேரூர் ஆனந்தவள்ளி சமேத  சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 7ம் நாளான இன்று காலை அலங்கரிக்கப்பட்ட தேவி-பூதேவி சமேதராக  சுந்தரவரதராஜ பெருமாளின் தேரோட்டம் நடைபெற்றது. தேரடி வீதியில் துவங்கி சின்ன நாராசம்பேட்டை தெரு, திருமலையா பிள்ளை தெரு, பஜார் வீதி, ராயர் தெரு உள்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக வீதியுலாவாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்து சென்றனர். தேரோட்டத்தின் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.

The post கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் மாமல்லபுரம் தலசயனபெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: