பளியன்குடி வனப்பகுதி வழியாக கண்ணகி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மருத்துவ முகாம்

கூடலூர் : கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவினை முன்னிட்டு, பளியன்குடி வனப்பகுதி வழியாகச் செல்லும் பக்தர்களுக்கு, சிறப்பு சித்தா மற்றும் ஓமியோபதி மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.தமிழக – கேரளா எல்லையில் பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியிலுள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் இன்று (ஏப்.23) சித்ரா பவுர்ணமி விழா, மங்கலதேவி கண்ணகி விழா, பூமாரி விழா என முப்பெரும் விழா நடைபெறுகிறது. கண்ணகி கோயிலுக்குச் செல்ல கேரள மாநிலம் குமுளியிலிருந்து பாதுகாக்கப்பட்ட கேரள வனப்பாதை வழியாக ஜீப் செல்லும் வண்டிப்பாதையும், கூடலூர் அருகேயுள்ள பளியன்குடிலிருந்து தமிழக வனப்பகுதி வழியாக 6.6 கி.மீ நடைபாதையும் உள்ளது.

தமிழக வனப்பகுதி வழியாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணகி கோவிலுக்கு நடை பயணமாக செல்கின்றனர். இவர்களுக்கு தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில், சித்தா மற்றும் ஓமியோபதி மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் சிராஜுதீன் கூறுகையில், ‘‘இம்முகாமில் ஓமியோபதி மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி, சித்த மருத்துவர்கள் ஜன்னத், சொர்ண பாரதி, மருந்தாளுநர்கள் ஞானசெல்வம், பசும்பொன், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பு சிகிச்சை அளிக்க உள்ளனர்.

நடைபயண பக்தர்களுக்கு அதிகாலையில் கபசுரக்குடிநீர், நிலவேம்பு கஷாயம், காலை முதல் வெட்டிவேர் ஊறல் நீர், நன்னாரி ஊறல் நீர், திருநீற்றுப்பச்சிலை விதை ஊறல் நீர், கோடை பானகம், ஆடாதோடை மணப்பாகு, மாதுளை மணப்பாகு, கறிவேப்பிலை குடிநீர், நன்னாரி சர்பத், பெரோசித் சிரப்புகள் வழங்கப்படும் அத்துடன், நரம்பு வலி, கெண்டைச்சதை வலி நீக்கும் வல்லாரை மாத்திரைகள், தொக்கண மசாஜ் சிகிச்சை, வலி நீக்கும் வர்ம சிகிச்சை, ஒத்தட சிகிச்சை, வலி நீக்க அகச்சிவப்பு கதிர் சிகிச்சைகளும், பெயின்பாம், பிண்டத்தைலம், கற்பூராதி தைலம், வாத கேசரி தைலம் போன்றவையும் வழங்கப்படும்’’ என்றார்.

பாதை அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை

கண்ணகி கோயிலுக்கு சென்று வர பாதை அமைத்துத் தரவேண்டும் என பெரியாறு – வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
இதன்படி விவசாயிகள் சங்க தலைமை பொறுப்பாளர்கள் சலேத், பொன்காட்சிக்கண்ணன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனுவை கலெக்டர் ஷஜீவனாவிடம் அளித்தனர்.

மனுவில், ‘‘கண்ணகி கோயில் திருவிழாவிற்கு இப்பகுதியில் உள்ளோர் அதிகம் சென்று வருகின்றனர். எனவே தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் உள்ள லோயர் கேம்ப்பில் இருந்து கண்ணகி கோயில் வரை, பக்தர்கள் சென்று வர வசதியாக பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர்.

The post பளியன்குடி வனப்பகுதி வழியாக கண்ணகி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: