செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை

*விவசாயிகள் ஆர்வம்

செம்பனார்கோயில் : வயல்களை இயற்கை உர வளத்துடன் மேம்படுத்துவதற்காக குறுவை, சம்பா, தாளடி அறுவடைக்கு பின்னர் ஆட்டு கிடை அமைக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தை மாதம் தொடங்கி பங்குனி மாதத்தில் நிறைவடையும். அறுவடை முடிந்த பின்னர் விவசாயிகள் வயல்களை காற்றாடப்போட்டு வைக்கின்றனர்.

இந்த காலகட்டத்தில் விவசாயிகள் வயல்களில் ஆட்டு கிடைகள் போட்டு மண்வளத்தை மேம்படுத்துகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே வாழ்க்கை கிராமத்தில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மற்றும் உளுந்து பயறு அறுவடை முடிந்த வயலில் விவசாயிகள், ஆட்டு கிடை போட்டுள்ளனர். இதற்காக கடலூர் மாவட்டம் வேப்பூரில் இருந்து ஆடு மேய்ப்பர்கள் மேய்ச்சலாக ஆடுகளை கொண்டு வந்து ஆட்டு கிடை அமைத்துள்ளனர். இதுகுறித்து ஆட்டு கிடை போட்டுள்ள ஆடு மேய்க்கும் தொழிலாளி கூறுகையில்,எங்களது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டமாகும். நாங்கள் கடலூர் மாவட்டம் வேப்பூரில் இருந்து ஏழு நாட்கள் மேய்ச்சலாக ஆடுகளை கொண்டு வந்து கிடை போட்டுள்ளோம்.

ஆடுகளை வயல்களில் கிடை போட்டு மேய்ச்சலுக்கு விடுவதால் அவற்றின் சிறுநீர், புழுக்கைகள் வயலுக்கு இயற்கை உரமாக கிடைக்கிறது. இதன் காரணமாக மண்ணின் நீர்பிடிப்புதிறன், காற்றோட்டம், மண்ணின் அடர்வு, மண்ணின் தன்மை, மண்ணின் வளம் அதிகரிக்கிறது. இதன் பலன் சாகுபடியின் போது கண்கூடாக தெரிவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தற்போது செம்பனார்கோயில் அருகே காளகஸ்திநாதபுரம், வாழ்க்கை போன்ற கிராமங்களில் ஆட்டு கிடை அமைத்துள்ளோம். ஆடு மேய்க்கும் தொழிலை நாங்கள் காலம், காலமாக செய்து வருகிறோம்.

அறுவடை தொடங்கியவுடன் நாங்கள் ஆடுகளை கிடை போடுவதற்காக டெல்டா மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு வந்து விடுவோம். அப்போது ஆடு கிடை போடும் வயல்களிலேயே தங்கிவிடுவோம். கிடை போடுவதற்கு பெரும்பாலும் செம்மறி ஆடுகளையே பயன்படுத்துவோம். வெள்ளாடுகளையும் மேய்ச்சலுக்கு விடவும். வயல்களில் நல்ல விளைச்சல் ஏற்படுவதால் ஆட்டுகிடை போட விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.

மேலும், ஒரு நாள் கிடை போடுவதற்கு சுமார் ரூ.1000ம் வரை கூலியாக பெறுகிறோம். விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டு கிடை அமைத்து கொடுப்போம். இங்கு இன்னும் சில நாட்களில் குறுவை சாகுபடி ஆரம்பமாக உள்ளதால் அடுத்தடுத்து ஊர்களுக்கு மாறி மாறி செல்வோம். இவ்வாறு ஆட்டு கிடை அமைப்பதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவதுடன் எங்களைப் போன்ற ஆடு மேய்ப்பவர்களும் பயன்பெறுகிறோம் என்று கூறினர்.

The post செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை appeared first on Dinakaran.

Related Stories: