இறைவனுக்கு உகந்த எட்டு மலர்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இறைவனை ஆலயம் சென்று சேவிக்கும்போது, நாம் வெறும் கையுடன் செல்லக்கூடாது என்பது மரபு. இயல்பாகவே ஏதேனும் ஒரு பெரியவரை காண செல்லும் போதே வெறும் கையோடு செல்லக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால், நாம் தலங்கள்தோறும் சென்று தரிசிக்கும் இறைவன், “மஹதோ மஹீயான்’’ என்று வேதங்கள் சொல்வது போல பெரியவை அனைத்தையும் காட்டிலும் பெரியவன். அப்படி இருக்க, அவனை வெறும் கையோடு சென்று வணங்குவது முறையல்ல. கையில் அவனுக்கு அர்ப்பணம் செய்ய, வாச நறுமலர்களை கொண்டு செல்லவேண்டும். “பூவார் மலர் கொண்டு அடியார் தொழுவார்’’ என்று சொல்லுவார் சம்பந்தர். அதாவது, அடியவர்களின் இலக்கணம் என்பது இறைவனை நன் மலரிட்டு வழிபடுதல்.

இறைவனை வழிபடும்போது பூவும் நீரும் மிகவும் முக்கியம் என்பதை அப்பர் பெருமானும், “ஜலம் பூவோடு தூபம் மறந்து அறியேன்’’ என்று பாடுகிறார். சரி.. உலகில் பல பூக்கள் உண்டு. அவற்றில் எந்த மலரைக் கொண்டு இறைவனை வழிபட்டால் நன்மை பெறலாம் என்று கேட்டால், அதற்கும் நமது சாஸ்திரங்கள் அழகான பதில் சொல்கிறது.

“எட்டு நாண் மலர் கொண்டவர் சேவடி
மட்ட லரிடு வார்வினை மாயுமால்
கட்டித் தேன் கலந்தன்ன கெடில
வீரட்டானரடி சேருமவர்க்கே’’
– என்று அப்பர் ஸ்வாமிகள் எட்டுவிதமான மலர்களைக் கொண்டு இறைவன் சேவடி வணங்க வேண்டும் என்கிறார்.

இதுவும் பொருத்தம்தான். சரி அந்த எட்டு மலர்கள் என்ன என்பதையும் பார்த்து விடுவோமா?

ஆழ்வார்களில் சிறந்தவரான பெரியாழ்வார், (ஏழாம் பத்து – இரண்டாம் திருமொழி) கண்ணனுக்கு எட்டு விதமான மலர்களைச்சுட்டுகிறார். அவை பின்வருமாறு.
1) செண்பகம், 2) மல்லிகை, 3) பாதிரி, 4) மரிக்கொழுந்து, 5) குருக்கத்தி, 6) இருவாட்சி, 7) புன்னை, 8) செங்கழுநீர் என்பவையே அந்த எட்டு மலர்கள். வாஸ்தவத்தில் இவை எட்டு மலர்களின் பெயராகத் தோன்றினாலும் உண்மையில் இவை, இறை அடியார்களிடம் இருக்க வேண்டிய எட்டுக் குணங்களைக் குறிக்கிறது.

“அஹிம்சா பிரதமம் புஷ்பம்,
புஷ்பம்
இந்திரிய நிக்ரக:
ஸர்வ பூத தயா புஷ்பம் க்ஷமா புஷ்பம்
விஷேஷத:
ஞான புஷ்பம் தப: புஷ்பம் சாந்தி புஷ்பம்
தத்தைவ ச
சத்யம் அஷ்ட விதம் புஷ்பம் விஷ்ணோ:
பிரீதி கரன் பவேத்’’
– என்கிறது சாஸ்திரங்கள்.

காடு மலைகளில் தேடி பல புஷ்பங்களை கொண்டு இறைவனை அர்ச்சிப்பதைவிட, மேலே சொன்ன எட்டு புஷ்பங்களை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வது வெகு சிறப்பு வாய்ந்தது. இந்த புஷ்பங்கள், செடி கொடியில் பூக்கும் புஷ்பங்கள் இல்லை. மாறாக மனிதன் மனம் என்னும் காட்டிலே, நல்ல எண்ணம் என்னும் தண்ணீரைப் பாய்ச்சும் போது மலரும் நல் குணங்கள் என்னும் மலர்கள். அவை பின்வருமாறு.

முதல் குணம் அல்லது மலர் – அஹிம்சை
தன்னை சரணடைந்த புறாவுக்காக தன் நிணத்தை கொடுத்து அந்த புறாவை துரத்தி வந்த கழுகிடம் இருந்து காத்து, இறைவனின் பெரும் கருணையைப் பெற்ற சிபிச் சக்ரவர்த்தி இந்த குணத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு.

இரண்டாம் குணம் அல்லது மலர் –  புலனடக்கம் (இந்திரிய நிக்ரக:)
அப்பர் சுவாமிகள் உழவாரப் பணி செய்யும்போது, அவருக்கு பொன்னும் பொருளும், கிடைத்தது. அதை குப்பை என்று சொல்லி தூக்கி எறிந்தார். பிறகு அவர் முன்னே வந்து தேவ லோக மாதர்கள் நடமாடிய போதும் இறைவன் திருவடியையே எண்ணி இருந்தார். இப்படி அவர் பொறிப் புலன்களை அடக்கிய புண்ணியர் என்பதை உலகிற்கு ஈசன் எடுத்துக் காட்டியதாக பெரிய புராணம் சொல்கிறது. மெய் வாய் விழி நாசி மற்றும் செவியை அடக்கி இறைவன் பணியில் ஈடுபடுவதற்கு அப்பர் சுவாமிகள் ஓர் எடுத்துக்காட்டு.

மூன்றாவது குணம் அல்லது மலர் – அனைத்து உயிர்களிடத்தும் அன்பு – (ஸர்வ பூத தயா)
அன்பே சிவம் என்று உணர்ந்து அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டுவது. இதற்கு வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடிய வள்ளல் பெருமானை உதாரணமாகக் காட்டலாம்.

நான்காவது குணம் அல்லது மலர் -மன்னிப்பு (க்ஷமா)

அடுத்தவர் செய்யும் தீமையை, அவர்கள்மீது கொண்ட பெரும் கருணையால், அவர்கள் வேண்டாத போதும் மன்னிப்பு வழங்குவது. கல்லைக்கட்டி கடலில் இட்ட போதும், கொதிக்கும் சுண்ணாம்புக் காள்வாயில் விட்ட போதும், பல்லவ மன்னனை மன்னித்து தனது சீடனாக ஏற்ற அப்பர் பிரானை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.

ஐந்தாவது குணம் அல்லது மலர் – ஞானம்

காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்ற வாசகத்தைப் படித்ததும், ஞானோதயம் ஏற்பட்டு, மாட மாளிகை கூட கோபுரங்கள் பெரும் செல்வங்கள் என அனைத்தையும் துறந்து வெறும் கோவணத்துடன் துறவு பூண்ட பட்டினத்து அடிகள் ஞானத்திற்கு உதாரணம்.

ஆறாவது குணம் அல்லது மலர் – தவம்
தவத்தால் இறைவனை அடைந்த, பிருகு, ஆங்கீரசர், வியாசர், சுகர், நாரதர், பிருங்கி, அகத்தியர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர் போன்றவர்கள் தவத்திற்கு எடுத்துக் காட்டு.

ஏழாவது குணம் அல்லது மலர் – மன அமைதி (சாந்தி)

“சொல் அற சும்மா இரு’’ என்று முருகனிடம் இருந்து உபதேசம் பெற்று, அமைதியாக தன்னைத் தான் உணர்ந்து அதன் வழி இறைவனை அடைந்த அருணகிரிநாதர் இதற்கு எடுத்துக்காட்டு.

எட்டாவது குணம் அல்லது மலர் – நேர்மை (சத்யம்)

சத்தியத்தை கடைப்பிடித்து இறைவனை அடைந்த அரிச்சந்திரனும், ஒரு பசுவுக்கு நீதி வழங்க தனது சொந்த மகனும் நாட்டின் இளவரசனுமான, வீதிவிடங்கனை தேர் காலில் இட்டு நீதி வழங்கி, அரன் திருவடி சேர்ந்த மனுநீதிச் சோழனும் இதற்கு எடுத்துக் காட்டு.

இந்த எட்டுக் குணங்களும் அல்லது பூக்களும் யாரிடத்தில் இருக்கிறதோ, அவர்தான் விஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தமான பக்தர் என்று மேலே நாம் கண்ட ஸ்லோகம் சொல்கிறது. இந்த எட்டு குணங்களையும் முடிந்த அளவில் வளர்த்துக்கொண்டு, பூமியில் நாம் வாழும்போது பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமல், நேர்மையோடும், நியாயத்தோடும், கருணையோடும், அன்போடும், பண்போடும் வாழ்வதுதான் இறைவனுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய சேவை என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.

ஆடம்பரமாக பூஜை செய்வதை விட, இந்த எட்டுகுணங்களால் இறைவனை பூஜிப்பதே ஒரு நல்ல அடியவர்க்கான லட்சணம். இதையே ஆழ்வார்களும் நாயன்மார்களும் நமது முன்னோர்களும் நமக்கு சொல்லி இருக்கிறார்கள். அதன் வழி நடந்தும் இருக்கிறார்கள்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

The post இறைவனுக்கு உகந்த எட்டு மலர்கள் appeared first on Dinakaran.

Related Stories: